வெள்ளி, 20 அக்டோபர், 2023

காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்: 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!

 

காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும்,  இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இரு தரப்புக்கு இடையேயான போர் 14-வது நாளை எட்டியுள்ளது.

காஸா மீது தரை வழித் தாக்குதலை மேற்கொள்ளும் வகையில், எல்லையில் பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்து வருகிறது. காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்றும் குண்டுகளை வீசின. இதில் தெற்கு காஸா பகுதியில் உள்ள ரபா, கான், யூனிஸ் நகரங்களில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


காஸா பகுதியில் நான்கு இந்தியர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சிக்கல் நீடிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, இஸ்ரேலில் இருந்து 5 சிறப்பு விமானங்கள் மூலம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காஸாவில் நடந்த தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை என்றும், அங்குள்ள 4 இந்தியர்களை மீட்க உரிய வாய்ப்பு கிடைக்கும் போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


source https://news7tamil.live/israel-is-continuously-attacking-gaza-there-is-a-problem-in-rescuing-4-indians.html