கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் உள்ள யெகோவா விட்னஸ் ஸம்ரா கிறிஸ்தவ கூட்டரங்கில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது.
அப்போது பலத்த சப்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது.
தொடர்ந்து, அந்த இடமே சிதறி தீப்பற்றி எரிந்தது. மேலும், இரண்டு குண்டுகள் வரை வெடித்த சப்தம் கேட்டதாக பிரார்த்தனையில் கலந்துகொண்ட வயதான பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ பகுதியில் தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் இன்று (அக்.29) காலை 9.30 மணிக்கு நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் பி ராஜிவ் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆறுதல் கூறினார்.
சசி தரூர் அதிர்ச்சி
இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள காங்கிரஸ் திருவனந்தபுரம் மக்களவை எம்.பி. சசி தரூர் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்பை தொடர்ந்து, கொச்சியின் களமசேரியில் உள்ள யெகோவா தேவாலயத்திற்கு பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோது தேவாலயத்தில் 2500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/one-killed-and-20-injured-at-blast-at-convention-centre-in-kerala-1676137