வழக்கமான தேர்வுகளின் முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும், மாணவர்களின் தரவரிசையின் அடிப்படையில் சிறப்புத் தொகுதிகளாகப் பிரிக்கப்படக்கூடாது ஆகியவை, பயிற்சி நிறுவனங்களுக்கான ராஜஸ்தான் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் பரிந்துரைகளில் சில.
ராஜஸ்தான் கோட்டா நகரில் அதிகரித்து வரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலைகளைத் தடுக்க கல்விச் செயலர் பவானி சிங் தேத்தா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்த பின்னர், ஒன்பது பக்க வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 27 அன்று வெளியிடப்பட்டன.
பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு, 9 ஆம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களை பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கைக்கு ஊக்குவிப்பதில் இருந்து கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் மதிப்பீட்டுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களை தொகுதிகளாக பிரிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது வழிகாட்டுதல்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம், கடும் போட்டி மற்றும் தேர்வில் குறைந்த வெற்றி விகிதம், பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பு, முறையான கவுன்சலிங் இல்லாதது, மதிப்பீட்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை தொகுதிகளாக பிரிப்பது, சலிப்பான சூழல், மற்ற கரிகுலர் செயல்பாடுகள் இல்லாமை மற்றும் குடும்பத்திலிருந்து விலகி இருப்பது போன்றவை தற்கொலைகளுக்கான முக்கிய காரணங்கள் என்று கமிட்டி கண்டறிந்தது.
எனவே, பயிற்சி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையின் போது அகர வரிசைப்படி தொகுதிகளை தீர்மானிக்க வேண்டும் மற்றும் படிப்பு முடியும் வரை தொகுதிகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
"பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வித் திறனின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது" என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக இருக்கும் கூடுதல் பரிந்துரைகள் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கத்தில் உள்ளன, இதில் வருகை மோசடியைத் தடுக்க ஃபேஷியல் ரெகக்னிஷன், கட்டாய வாராந்திர விடுமுறைகள், விடுமுறைக்கு மறுநாள் தேர்வுகளைத் தவிர்ப்பது, ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளுக்கான நடத்தை நெறிமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.
வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த கேட்கீப்பர் பயிற்சியை பயிற்சி மையங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குவதற்காக மாநில அரசு, பயிற்சி மையங்கள் மற்றும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
வழிகாட்டுதல்களின்படி, பயிற்சி மையங்கள் 45 நாட்கள், 90 நாட்கள் மற்றும் 120 நாட்கள் முடிந்தவுடன் மாணவர்களுக்கான கவுன்சிலிங் அமர்வுகளை நடத்த வேண்டும், என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டு கோட்டாவில் 25 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இது எட்டு ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது
source https://tamil.indianexpress.com/india/kota-neet-suicides-rajasthan-govt-issues-guidelines-for-coaching-centres-1425828