செவ்வாய், 3 அக்டோபர், 2023

அடுத்தடுத்து போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள்; கோரிக்கைகளை நிறைவேற்றுமா தமிழக அரசு?

 

Teachers Protest Chennai

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா தமிழக அரசு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அடுத்தடுத்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா தமிழக அரசு  என்று கேள்வி எழுந்துள்ளது. 

கடந்த சில மாதங்களாக தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பணிகளை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

சம வேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் தலைமை அலுவலகமான டி.பி.ஐ வளாகத்தில் தொடர்ந்து 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமுற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல, தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை சேர்ந்த 3 சங்கங்கள், பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் டி.பி.ஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால், தீர்வு காணப்படவில்லை.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம், புதிய ஒய்வூதியத் திட்ட (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் போராட்டத்தை நடத்தின.

இந்த சூழ்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உட்பட பல சங்கங்களும் அடுத்தடுத்து தொடர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. 

அசிர்யர்கள் சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது. அதுமட்டுமல்ல, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் சங்கங்கள்  இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராடியபோது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியது.

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால், சென்னை டி.பி.ஐ வளாகம் போராட்டக் களமாகியுள்ளது. 

காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் (அக்டோபர் 3), 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆசிரியர் இயக்கங்களின் இந்த போராட்டங்கள் தொடரும்பட்சத்தில் அது மாணவர்களின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டுமென கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக தீர்வு காண வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/govt-school-teachers-protest-continue-can-affect-students-1428502