சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1871-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. பத்தாண்டுகள் இடைவெளியில் என தொடர்ந்து 1931-ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தினர். அப்போது சாதி தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தபடவில்லை.
விடுதலைக்கு பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் விபரங்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டனர். அரசின் ஒரு கொள்கை முடிவாக சாதிவாரி கணக்கெடுப்பை தவிர்த்துள்ளனர். சட்டப்படி சாதிக் கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஏனென்றால் அரசியல் சாசனம் மக்கள் தொகையை ஏற்கிறது, சாதி அல்லது மதத்தை அல்ல என்றும் கூறப்படுகிறது.
கொரோனாவின் தாக்கம்
கடந்த 2011ல் சமூக, பொருளாதார ,சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது சுமார் 98% துல்லியமாக இருந்தது என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதன் விபரங்களை அரசு வெளியிடவில்லை. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அடுத்த கணக்கெடுப்பு எப்போது என்பதும் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முந்தைய 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,147 ஆக இருந்த சாதிகளின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு சாதிக் கணக்கெடுப்பில், பல லட்சங்களாக உயர்ந்துள்ளது என்கிறார்கள். இதுவே சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பெரும் நடைமுறைச் சிக்கலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்மாதிரியாக பீகார்
இதற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் அதிகாரப்பூர்வமாக விபரத்தை வெளியிடவில்லை. ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் விரும்பினாலும் நடத்தவில்லை. அந்தவகையில் பீகார் முன்மாதிரியாகியுள்ளதாக சொல்கின்றனர். தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு முன்னோட்டமாக பிகார் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.
பிகாரில் வெளியிடப்பட்டுள்ள ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி, பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலத்தில் மிகப்பெரிய மக்கள்தொகை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 36%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 27.12%, எஸ்.சி 19.65%, எஸ்.டி 1.68%, உயர் சாதியினர் 15.52% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் இந்துக்கள் 82%, முஸ்லிம்கள் – 17.7%, கிறிஸ்தவர்கள் – 0.05%, பௌத்தர்கள் – 0.08%, சீக்கியர்கள் – 0.01% எந்த மதத்தையும் பின்பற்றாதோர் 2,146 பேர் அதாவது 0.0016% பேர் மட்டுமே உள்ளனர்.
தலைவர்கள் கருத்து
பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்கள் வெளியானதையடுத்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், ’’பிகாரில் OBC + SC + ST 84% உள்ளதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. ஆனால், மத்திய அரசின் 90 செயலாளர்களில், 3 பேர் மட்டுமே OBC வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்தியாவின் சாதிவாரியான விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். அதிக மக்கள் தொகை: அதிக உரிமைகள், இதுவே எங்கள் உறுதிமொழி’’ என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்றுள்ளனர். தேசிய அளவிலும் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைத்தால் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 1928ல் நீதிக்கட்சியின் ஆட்சியில் கம்யூனல் ஜி.ஓ அடிப்படையில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. விடுதலைக்கு பின்னர் ரத்து, பின்னர் அரசியல் சாசனத்தில் திருத்தம் என இட ஒதுக்கீடு பல்வேறு நிலைகளைக் கடந்துள்ளது. தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 20, ஆதி திராவிடர் 18, பழங்குடியினர் 1 சதவீதம் என 69 % இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
இடஒதுக்கீட்டில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவையில்லை. இது நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
ஆதரவும் எதிர்ப்பும்
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு ஒற்றுமையை வலுப்படுத்தும். ஜனநாயகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், சமூகத்தில் சாதிய ஒருமுனைப்படுத்தல், பெரும்பான்மைவாதம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் உள்ளது. இது சமூகத்தில் மக்களின் பரஸ்பர உறவுகளை பாதிக்கலாம் என்று எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? தேசிய அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா?… எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? சமூக நீதியை உறுதிப்படுத்துமா சாதிவாரி கணக்கெடுப்பு…? இதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
source https://news7tamil.live/caste-wise-census-is-the-need-of-the-hour-will-it-ensure-social-justice.html