செவ்வாய், 9 ஏப்ரல், 2024

கோடீஸ்வரர்களில் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

கோடீஸ்வரர்களில் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுப்பக்கம் அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், தங்களின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பிரதமர் மோடி கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவுக்கு ரத்து செய்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

ஒரே சமயத்தில் சில கோடீஸ்வரர்களின் ரூ. 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். இவ்வளவு பெரிய தொகையை கொண்டு கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம். காங்கிரஸ் அறிவிக்கும் திட்டங்களுக்கு நிதி எங்குள்ளது என்று கேட்பவர்கள், இத்தகைய கணக்குகளை உங்களிடம் இருந்து மறைக்கின்றனர். நண்பர்களுக்கு கருணை காட்டுவது போதும், சாமானியர்களுக்காக அரசு கஜானாவை திறக்கும் நேரம் வந்துவிட்டது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.


source https://news7tamil.live/prime-minister-modi-is-among-the-millionaires-who-waived-rs-16-crore-loans-rahul-gandhi-allegation.html#google_vignette