வெள்ளி, 5 ஏப்ரல், 2024

மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

 

ஜிஎஸ்டி ரூ.1 என்றால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 29 பைசா மட்டுமே கொடுக்கிறது. எனவே, மோடியை சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என அமைச்சர் உதயநிதி தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இன்று (ஏப். 5) பட்டுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

“நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு என்பது கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்தது மட்டுமே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூ.450 ஆக இருந்தது. தற்போது ரூ.1200 என்பதை மறந்து விட கூடாது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய அரசுதான் மோடி அரசு.

ரூ.100 குறைத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75, டீசல் ரூ.65 -க்கு கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனை உறுதியாக நிறைவேற்றி தருவார். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

ஜிஎஸ்டி தொகை ஒரு ரூபாய் என்றால் நமது மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் தொகை 29 பைசா மட்டுமே. ஆனால் பாஜக ஆளும் அதே உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது. நிதீஷ் குமார் ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் 7 ரூபாய் அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறது. அதனால் தான் அடுத்த முறை மோடியை நீங்கள் சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என்று கூறுகிறேன்.

ஏனென்றால் இந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாகி விடுவார். நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு. சிஏஏ சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்ற ஆதரவு அளித்தவர் பழனிசாமி. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 460 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாட்டிலேயே பெண் பணியாளர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம்.

தினந்தோறும் 17 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர். கனடா நாட்டிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். இந்த முறை 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்”

இவ்வாறு தெரிவித்தார்.

SOURCE https://news7tamil.live/call-pm-modi-mr-29-paisa-minister-udayanidhi-lobby.html#google_vignette