செவ்வாய், 2 ஏப்ரல், 2024

கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!

 


கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில், அத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி பேசியது குறித்த விவரங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவில் இருந்து 18 மைல் தொலைவிலும் கச்சத்தீவு உள்ளது. கச்சத்தீவின் நீளம் மொத்தம் 1.5 கிலோ மீட்டர்; கச்சத்தீவின் அகலம் 350 மீட்டர். கச்சத்தீவின் மொத்தப் பரபரப்பளவு 285 ஏக்கர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1920களில்தான் கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்கிற சிக்கல் எழுகிறது. 1921-ல் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அரசு அதிகாரிகளுக்கும் இடையே கச்சத்தீவு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்களுக்கும் மீன்பிடி உரிமை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. 1936, 1940-ம் ஆண்டுகளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளராக பி.பி.பியரிஸ், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என உரிமை கோர முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்தியா, இலங்கை நாடுகள் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றன. அப்போது ராமநாதபுரம் சேதுபதியின் திவான் பொன்னுச்சாமி பிள்ளையிடம் இருந்து கே.என்.முகமது மீர்சா மரைக்காயர் என்பவர் கச்சத்தீவைக் குத்தகைக்கு எடுத்தார். இந்த குத்தகை ஒப்பந்தத்தில் கூட, * “ராமநாதபுரம் ஜில்லா இராமேஸ்வரம் சார்பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இருக்கும் சமஸ்தானத்துக்குப் பாத்தியமான கச்சத்தீவு” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. * 1948-ம் ஆண்டு செப்டம்பர் 7-ல் மெட்ராஸ் எஸ்டேட் (அபாலிஷன் அண்ட் கன்வர்ஷன் இன்டு ரயத்வாரி) சட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை மாகாணத்தில் (இன்றைய தமிழ்நாடு) ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. இதனால் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கச்சத்தீவும் சென்னை மாகாண அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே நீடித்தது.

1950களில் இலங்கையில் இந்திய வம்சவளித் தமிழராகிய மலையகத் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது. அந்த காலகட்டத்தில் கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படை ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றது. இந்தியாவின் எதிர்ப்பால் பின்வாங்கியது இலங்கை. 1967-ல் இந்திய நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியனர் திமுக எம்பிக்கள். இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள், கோரிக்கைகளை திமுக முன்வைத்தும் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு அக்கறை காட்டவில்லை.

1970களில் மீண்டும் இலங்கை, கச்சத்தீவுக்கு சொந்தம் கொண்டாடி பேசத் தொடங்கியது. இதனால் கச்சத்தீவு இந்தியாவுக்குதான் சொந்தம் என்பதற்கு உரிய ஆதாரங்களைத் திரட்ட வேண்டும் என தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி பேராசிரியர் கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் 1973-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி பகிரங்கப்படுத்தினார். 1972-ல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசு பதிப்பித்த ராமநாதபுரம் மாவட்டம் கெசட்டில், கச்சத்தீவை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சர்வே எண் 1250-ல் அமைந்துள்ள நிலமாக உறுதி செய்தது.

1970களில் இலங்கையில் பாகிஸ்தான் விமான தளம் அமைக்க முயன்றது. இதனை இந்தியா மிக கடுமையாக எதிர்த்தது. அப்போதுதான் இலங்கை அரசு ஒரு பேரத்தை முன்வைத்தது. அதாவது பாகிஸ்தானை விமான தளம் அமைக்க அனுமதிக்காமல் நாங்கள் இருக்கிறோம்; எங்களுக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த பேரம். இந்தப் பேரத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார்.

1974-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ பண்டாரநாயகே வருகை தந்தார். அப்போது சிறிமாவுக்கும் இந்திராவுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இதற்கு உடனடியாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

1974-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அப்போதைய முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், தமிழரசு கட்சி, பார்வார்டு பிளாக், இடதுசாரிகள் பங்கேற்றனர். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் தந்து கையெழுத்து போடாமல் வெளியேறியது அதிமுக. அதிமுகவின் பிரதிநிதி அரங்கநாயகம், இந்தக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு ஒப்புதல் தராமல் வெளியேறினார். நாடாளுமன்றத்தில் 1974-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி திமுக எம்பியாக இருந்த முதுபெரும் தலைவர் இரா.செழியன், கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பி தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்து வைத்தார்.

1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது; இலங்கைக்கு தரக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு – மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது என்றார். மேலும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, அப்போது தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது.

தமிழ்நாட்டில் ஆண்ட திமுக அரசு முன்னெடுத்த கடுமையான எதிர்ப்பின் விளைவாக 1976-ம் ஆண்டு கச்சத்தீவை மையமாக வைத்து “இந்தியா- இலங்கை” இடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் உருவானது. அதில் இலங்கையின் அனுமதி இல்லாமல் கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உண்டு; கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்த முடியும்; கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழ்நாட்டு மீனவர்க பங்கேற்கவும் உரிமை உண்டு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1983ல் தமிழ்நாட்டில் அண்ணா திமுக ஆட்சியில் மறைந்த எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதன் பின்னரே கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது. 1980களுக்குப் பின்னர் இலங்கையில் இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையே யுத்தம் தொடங்கியது. அப்போது முதல் கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றாலே இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என்கிற அட்டூழியங்களை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறது.

தற்போது மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பான விவரங்களை பெற்றார். அதனை முன்வைத்து பாஜக, திமுக- காங்கிரஸை விமர்சிக்கிறது. இதற்கு திமுக பதிலடி தந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவித்து அப்போது கூறிய கருத்துகள் தற்போது வைரல் ஆகியுள்ளது. குறிப்பாக கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!”  என்று அப்போது கருணாநிதி பேசியது குறித்த செய்திதாள் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

source https://news7tamil.live/former-chief-minister-m-karunanidhis-comment-on-kachchathivu-issue-going-viral.html