வெள்ளி, 5 ஏப்ரல், 2024

மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’ – காங்கிரஸ் வாக்குறுதி!

 

‘கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் திரும்ப பெறப்படும்’  என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

“காலத்தை கை வெல்லும்” என்ற  லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  48 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முகப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் புன்னகையுடன் கை அசைக்கும் படம் இடம் பெற்றுள்ளது.  அதன் கீழ் பகுதியில்,  பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி நடைபயணமாக சென்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.  இந்த தேர்தல் அறிக்கையில்,  விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பாஜக தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் மேலும் சில முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:

  • ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வராது.
  • தேசிய கல்விக்கொள்கை மறு ஆய்வு செய்யப்படும்.
  • அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
  • கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் திரும்ப பெறப்படும்.
  • தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.
  • பிஎம் கேர்ஸ் நிதி ஊழல் குறித்து விசாரிக்கப்படும்.
  • மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி.

source https://news7tamil.live/all-bjps-anti-people-laws-will-be-withdrawn-congress-promises.html#google_vignette