சனி, 6 ஏப்ரல், 2024

காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐநாவில் தீர்மானம்… வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா!

 


காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.  அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர்.  அத்துடன்,  200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர்.  இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வருகிறது.  இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33 ஆயிரத்தும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக நேற்று (ஏப். 5) 4 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.  அதில் 3 தீர்மானங்களை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.  காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தக் கோரியும், போர்க்குற்றங்களுக்கு நீதி கோரியும் வலியுறுத்தப்பட்டது.  பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படைத் தேவைகளையும்,  அவசர உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கும் இத்தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  ஹமாஸ் அமைப்பினர் சிறைப்பிடித்துள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும் இத்தீர்மானம் கோரியுள்ளது.  இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா,  ஜப்பான்,  நெதர்லாந்து,  பிரான்ஸ் மற்றும் ருமேனியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்கவில்லை.

சீனா, பிரேசில், இந்தோனேசியா, வங்கதேசம், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 28 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.  அமெரிக்கா, அர்ஜென்டினா, பல்கேரியா, ஜெர்மனி, மலாவி மற்றும் பராகுவே ஆகிய 6 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

பாலஸ்தீன மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 42 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.  சிரியன் கோலன் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை விடுவிக்கக் கோரிய தீர்மானத்திற்கும் இந்தியா உள்பட 42 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.  கிழக்கு ஜெருசலேம் உள்பட பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுவிக்கக் கோரிய தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.


source https://news7tamil.live/india-boycotted-the-un-resolution-for-a-cease-fire-in-gaza.html