வெள்ளி, 13 மார்ச், 2026

ஈரான் போர்: விபத்திற்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்... 4 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்

 

ஈரான் போர்: விபத்திற்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்... 4 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம் 13 03 2026 

america 1

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்காவின் கே.சி.135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. 

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் மற்றொரு விமானமானது பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.  

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் கே.சி.-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் எபிக் ப்யூரி நடவடிக்கையின் போது, நட்பு நாடுகளின் வான்பரப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் 2 விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. அதில் ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விழுந்தது. 

மற்றொன்று பாதுகாப்பாகத் தரையிறங்கியது. தற்போது மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது நட்புப் படைகளின் தவறுதலான தாக்குதலாலோ ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.  இதன்மூலம் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது 4-வது விமானத்தை இழந்துள்ளது. ஏற்கனவே குவைத் படைகள் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று எப்-15 ரக ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது  குறிப்பிடத்தக்கது.



source https://tamil.indianexpress.com/international/america-military-kc-135-aircraft-crash-in-iraq-11210114