/indian-express-tamil/media/media_files/2026/03/28/govt-tv-ratings-policy-2026-tv-rating-agency-net-worth-requirement-landing-page-viewership-measurement-policy-2026-03-28-09-32-47.jpg)
Govt TV Ratings Policy 2026
எழுதியவர்: அம்ரிதா நாயக் தத்தா
இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களின் செல்வாக்கை நிர்ணயிக்கும் 'டிவி ரேட்டிங்' (TV Ratings) முறையில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய கொள்கையை (TV Ratings Policy 2026) வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறைகளை எளிதாக்கி, புதிய நிறுவனங்கள் இத்துறையில் நுழைவதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஒரு தொலைக்காட்சி மதிப்பீட்டு முகமையாக (Rating Agency) பதிவு செய்ய வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு (Net Worth) 20 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது இந்த வரம்பு 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள பல புதிய நிறுவனங்கள் இத்துறையில் கால் பதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய கொள்கையின் மிக முக்கியமான அம்சம் 'லேண்டிங் பேஜ்' குறித்ததாகும். ஒரு தொலைக்காட்சியை ஆன் செய்தவுடன் தானாகவே தோன்றும் முதல் சேனல் (Landing Page), விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை (Viewership), அந்த சேனலின் உண்மையான ரேட்டிங்கில் கணக்கிடப்படக் கூடாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தரவுகளின் துல்லியத்தன்மையை அதிகரிக்க, மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்களது ஆய்வு வளையத்தை விரிவுபடுத்த வேண்டும்.
அதன்படி, அடுத்த 18 மாதங்களுக்குள் (தற்போதுள்ள நிறுவனங்களுக்கு 6 மாதங்கள்) தங்களது மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை 80,000 ஆக உயர்த்த வேண்டும். இறுதியில் இது 1,20,000 வீடுகள் என்ற இலக்கை எட்ட வேண்டும்.
கேபிள், டி.டி.எச்., ஒ.டி.டி. மற்றும் கனெக்டட் டிவி என அனைத்துத் திரைகளிலும் மக்கள் பார்ப்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.
நிர்வாகத்தில் நடுநிலைமையை உறுதி செய்ய, மதிப்பீட்டு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் (Board of Directors) குறைந்தபட்சம் 50% பேர் சுதந்திர இயக்குநர்களாக (Independent Directors) இருக்க வேண்டும். இவர்கள் எந்தவொரு ஒளிபரப்பு நிறுவனம் அல்லது விளம்பர நிறுவனத்துடனும் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், நிறுவனங்கள் தங்களது தரவுகளைத் திரட்டும் முறையை இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். இதற்காகக் காலாண்டுக்கு ஒருமுறை உள் தணிக்கையும் (Internal Audit), ஆண்டுக்கு ஒருமுறை வெளிப்படையான தணிக்கையும் (External Audit) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மக்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்க 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023'-ன் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் அமைய வேண்டும். பொதுமக்களின் புகார்களைத் தீர்க்க 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கக்கூடிய நோடல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் முதல் உரிமம் ரத்து வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
ஒ.டி.டி. தளங்கள் அல்லது டிவி விநியோக தளங்கள் தங்களது தளத்தில் ஒளிபரப்பாகும் சேனல்களின் பார்வைகுறித்த தரவுகளைத் தங்களது இணையதளத்தில் வெளியிடலாம். இதற்கு இப்புதிய கொள்கையின் கீழ் தனியாகப் பதிவு செய்யவோ அல்லது அனுமதி பெறவோ தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் அமலுக்கு வருவதன் மூலம், இனி வரும் காலங்களில் டிவியில் எந்த சேனல் உண்மையிலேயே முதலிடத்தில் உள்ளது என்பதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்.
source https://tamil.indianexpress.com/india/govt-tv-ratings-policy-2026-tv-rating-agency-net-worth-requirement-landing-page-viewership-measurement-policy-11428639





