1985 உலக சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாகச் செயல்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அவர் இந்தியாவுக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 26 மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1983-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அவர் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இளம் வீரராக இருந்தபோது, உள்ளூர் போட்டியில் இரண்டு ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆரம்பத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அவரது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்று 1984-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளிப்பட்டது; அதில் அவர் ஒரு ஆட்டத்தில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் அவர் திகழ்ந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். குறிப்பாக சுழற்பந்து வீச்சு குறித்த தனது தொழில்நுட்பப் பகுப்பாய்வுகளுக்காக அவர் அறியப்பட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/34d1b328-2b0.png)
இந்த நிலையில், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பி.சி.சி.ஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். தனது 23 ஆண்டு கால வர்ணனையாளர் பணியின் போது இனவெறி மற்றும் வாய்ப்பின்மை ஆகியவற்றை குற்றம்சாட்டி, வர்ணனை செய்வதில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/6e6ec0ed-78f.png)
இது குறித்து 60 வயதான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "பி.சி.சி.ஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் போடும் நிகழ்வு மற்றும் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழா ஆகியவற்றில் வர்ணனை செய்ய பி.சி.சி.ஐ என்னை அனுமதிக்கவே இல்லை. ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே போன்றவர்களுக்கும், புதிதாக வர்ணனைக்கு வருபவர்களுக்கும் மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனது சுயமரியாதையை இழந்து என்னால் யாருக்கும் அடிபணிந்து கிடக்க முடியாது.
எனது இந்த ஓய்வு ஒரு நீண்ட கதையின் தொடக்கம் மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும்போது பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். பி.சி.சி.ஐ இதை நம்ப முடியாமல் திகைத்து நிற்கும்" என்றும் அவர் பதிவிட்டு உள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர், "நீங்கள் கருப்பாக இருப்பதால் உங்களை பரிசளிப்பு நிகழ்வில் அனுமதிக்கவில்லையா?" எனக் கேட்டதற்கு, "நீங்கள் சொல்வது சரி. நிற பாகுபாடுதான்" என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/sports/laxman-sivaramakrishnan-accuses-bcci-of-racism-forcing-commentary-retirement-tamil-news-11248558





