/indian-express-tamil/media/media_files/2026/03/13/sivagangai-akash-lockup-death-postmortem-report-findings-2026-03-13-14-49-37.jpg)
Sivagangai Akash Lockup death Postmortem report findings
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "தப்பியோடிய போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது" என்ற காவல்துறையின் ஆரம்பக்கட்ட விளக்கத்தை இந்த அறிக்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
உடலைச் சிதைத்த 28 காயங்கள்
அரசு மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆகாஷின் உடலில் மொத்தம் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் 'கீழே விழுந்ததால்' ஏற்பட்ட காயங்கள் அல்ல என்பதை மருத்துவக் குறிப்புகள் உணர்த்துகின்றன.
ஆகாஷின் வலது காலின் நடுப்பகுதியில் பலமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தசை, நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
கை, முழங்கை, முழங்கால் மற்றும் தொடைப் பகுதிகளில் ஏராளமான இடங்களில் சிவப்பு நிறச் சிறாய்ப்புகளும், ஆழமான கீரல்களும் காணப்படுகின்றன.
உட்புறப் பாதிப்புகள்: மூளையில் ரத்தக்கசிவு
வெளிப்புறக் காயங்களைத் தாண்டி, ஆகாஷின் உட்புற உறுப்புகளும் சிதைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளையின் முன்பகுதியில் ரத்தக்கசிவு (Hemorrhage) மற்றும் புள்ளி வடிவ ரத்தக் கசிவுகள் பதிவாகியுள்ளன. நுரையீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள் ரத்தக் கூட்டத்துடன் வீங்கிய நிலையில் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இறப்புக்கான துல்லியமான காரணத்தை இப்போதே உறுதி செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரசாயன பகுப்பாய்வு மற்றும் திசுப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதற்காகக் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் ரத்த மாதிரிகள் மதுரை மண்டல அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
16 காவலர்கள் மீது புகார்: சிபிசிஐடி விசாரணை
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 16 காவலர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆகாஷின் தந்தை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி (CB-CID) வச ஒப்படைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறையினரின் அத்துமீறலே தனது மகனின் மரணத்திற்குத் தீர்க்கமான காரணம் என ஆகாஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடரும் போராட்டம்: உடலை வாங்க மறுப்பு
சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவரது குடும்பத்தினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, பல நாட்களாக ஆகாஷின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை பகுதியில் பதற்றம் நிலவுவதால், போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பதும், சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவருமா என்பதும் தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sivagangai-akash-lockup-death-postmortem-report-findings-11209489





