திங்கள், 16 மார்ச், 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் அவகாசம்: இதை மிஸ் பண்ணாதீங்க மக்களே!

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பினைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். அன்றைய தினமே கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் வெளியிட்டது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை (2.89 கோடி) ஆண்களை விட (2.77 கோடி) அதிகமாக உள்ளது. குறிப்பாக, 12.51 லட்சம் இளம் வாக்காளர்கள் (18-19 வயது) முதல்முறை வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.

தொகுதி வாரியாகப் பார்க்கையில், சென்னையின் சோழிங்கநல்லூர் தொகுதி 5.36 லட்சம் வாக்காளர்களுடன் மிகப்பெரிய தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி 1.16 லட்சம் வாக்காளர்களுடன் மிகக்குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் விளங்குகின்றன.

விடுபட்டவர்களுக்கு இறுதி வாய்ப்பு: மார்ச் 26 வரை அவகாசம்

வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோருக்கு ஒரு பொன்னான வாய்ப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வழங்கியுள்ளார். வரும் மார்ச் 26-ஆம் தேதி வரை புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வழிகாட்டுதல்கள்:

புதிதாகப் பெயர் சேர்க்க: இதுவரை பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ (Form 6) பயன்படுத்த வேண்டும்.

முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்கள்: ஒரே தொகுதிக்குள் அல்லது வேறு தொகுதிக்கு முகவரி மாறினாலோ, பெயரில் உள்ள எழுத்துப்பிழைகளைத் திருத்தவோ படிவம் 8-ஐ (Form 8) பயன்படுத்த வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை தொலைந்திருந்தாலும் இதே படிவத்தைப் பயன்படுத்தலாம்.

பெயர் நீக்கம்: இறந்தவர்களின் பெயர்களை நீக்கவோ அல்லது ஒரே பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் அவற்றைச் சரிசெய்யவோ படிவம் 7-ஐ (Form 7) சமர்ப்பிக்க வேண்டும்.

Tamilnadu Special Intensive Revision Electoral Roll Voters List dist wise draft released Tamil News

விண்ணப்பிக்கும் முறைகள்

பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை இரண்டு வழிகளில் சமர்ப்பிக்கலாம்:

ஆன்லைன் முறை: தேசிய வாக்காளர் சேவை இணையதளம் (NVSP) அல்லது 'வோட்டர்ஸ் ஹெல்ப்லைன்’ (Voters Helpline) என்ற செல்பேசி செயலி வழியாக வீட்டிலிருந்தபடியே ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

இணைய வசதி இல்லாதவர்கள், அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று உரிய படிவங்களைப் பெற்று ஆதாரங்களுடன் வழங்கலாம்.

ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய, இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-election-2026-how-to-add-name-in-voter-list-tn-nvsp-online-registration-form-6-voter-helpline-app-registration-11217522