/indian-express-tamil/media/media_files/2026/02/26/chennai-high-court-3-2026-02-26-04-21-02.jpg)
Murasoli Trust case | Panchami land row | Madras High Court
திமுகவின் இதயத்துடிப்பாகக் கருதப்படும் முரசொலி அறக்கட்டளைக்கு எதிராகத் தொடரப்பட்ட நில ஆக்கிரமிப்புப் புகார், தற்போது சிபிஐ விசாரணை கோரும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள 12 கிரவுண்ட் நிலம், உண்மையில் தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 'பஞ்சமி நிலம்' என்றும், அதனை அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளதாகவும் நீண்ட காலமாகவே ஒரு சர்ச்சை நிலவி வருகிறது.
இது தொடர்பாக 2020-ஆம் ஆண்டே தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் (NCSC) விசாரணையைத் தொடங்கியது. அப்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல். முருகன் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார். அந்த விசாரணையை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை நீதிமன்றம் சென்றிருந்தாலும், அந்த மனு கடந்த 2024 ஜனவரியில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பகீர் குற்றச்சாட்டுகள்
தற்போது நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனப் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், ”1974-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணத்தின் (எண்: 4381/1974) அடிப்படையில் இந்த நிலம் வாங்கப்பட்டதாக அறக்கட்டளை கூறுகிறது. ஆனால், சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் அப்படி ஒரு ஆவணமே இல்லை. மாறாக 4383/1974 என்ற எண் கொண்ட ஆவணம் மட்டுமே இருக்கிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாக அறங்காவலராக இருக்கும் இந்த அறக்கட்டளை, 2025 மார்ச் நிலவரப்படி சுமார் ரூ.143.30 கோடி உபரி நிதியை வைத்துள்ளது, லாப நோக்கற்ற அமைப்பு என்று கூறிக்கொண்டு விளம்பர வருவாய் ஈட்டுவது குறித்து சிபிஐ தீர விசாரிக்க வேண்டும்” என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிக்காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன:
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கு (NCSC) புலனாய்வு செய்யும் அதிகாரம் கிடையாது, அது பரிந்துரை வழங்கும் அமைப்பாக மட்டுமே இருப்பதால், உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தார்.
"இந்த மனுதாரர் ஒரு பாஜக மாவட்டச் செயலாளர் என்பதை மறைத்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. எல். முருகன் ஆணையத்தில் இருந்தபோது திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட அரசியல் நாடகம் இது," என்று அவர் வாதிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை அவசியம் எனக் கருதினர். அதன் அடிப்படையில், மனுதாரரின் புகாருக்கு முரசொலி அறக்கட்டளை இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
சிபிஐ (CBI) மற்றும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் (NCSC) ஆகியவற்றுக்கும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/murasoli-trust-case-panchami-land-row-cbi-probe-madras-high-court-11428496





