அபுதாபியில் வெடித்துச் சிதறிய ஏவுகணை; 5 இந்தியர்கள் காயம்
தற்போது, ஈரானுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு ஈரான் மீதும், அதன் எரிபொருள் கிடங்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ஈரானின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடைநிறுத்தம் ஏப்ரல் 6 வரை நீடிக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். "ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிபொருள் கிடங்குகளை அழிக்கும் காலத்தை 10 நாட்களுக்கு நான் இடைநிறுத்துகிறேன். பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை மிகவும் சிறப்பாகச் செல்கிறது" என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஈரான், லெபனானில் தாக்குதல்கள்: இதற்கிடையில், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன, அதே நேரத்தில் லெபனானில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களையும் தரைவழி நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.
ஈரானிய ஏவுகணைகள் இடைமறிப்பு: ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வான்பரப்பில் இடைமறிக்கப்பட்டன.
ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தலைவர் மரணம்: இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் கடற்படைத் தலைவர் அலிரேசா டங்சிரி தங்களது தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.





