ஒரு நாளைக்கு 2 பில்லியன் டாலர்... ஈரானுடன் போரில் இறங்கிய அமெரிக்காவுக்கு எவ்வளவு இழப்பு பாருங்க! 13 3 2026
/indian-express-tamil/media/media_files/2026/03/13/america-2026-03-13-14-24-04.jpg)
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கும் அமெரிக்க தளங்கள் கொண்ட வளைகுடா நாடுகல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீது தொடுத்த போருக்கு அமெரிக்கா ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய முதல் ஆறு நாட்களிலேயே அதன் செலவு 11.3 பில்லியன் டாலர்களை தாண்டிவிட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 'தி கார்டியன்' இதழுக்கு தகவல் அளித்த நபர் கூறுகையில், இந்த மதிப்பீடானது பெரும்பாலும் ஆயுதங்களுக்கான செலவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், போரின் முழுமையான செலவை இது பிரதிபலிக்கவில்லை என்றும் கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதிக்கு படைகளை அனுப்புவதற்கான செலவு, மருத்துவச் செலவுகள் மற்றும் போரில் இழந்த ராணுவ விமானங்களை மாற்றுவதற்கான செலவுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் இந்தத் தொகை இன்னும் பல மடங்கு உயரும் என்றும் கூறியுள்ளார். 'தி கார்டியன்' இதழ் கடந்த வாரம் வெளியிட்ட செய்தியின்படி, போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் $2 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களைச் செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இது ஒரு நாளைக்கு $1 பில்லியன் ஆகக் குறைந்தது. ஆரம்பத்தில் அதிநவீன மற்றும் அதிக விலையுள்ள AGM-154 போன்ற 'கிளைடு பாம்கள்' பயன்படுத்தப்பட்டன. இதன் ஒரு யூனிட்டின் விலை $578,000 முதல் $836,000 வரை இருக்கும். அமெரிக்கக் கடற்படை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய 3,000 ஆயுதங்களை வாங்கியிருந்தது. போர் நீடிப்பதால் அமெரிக்கா இப்போது விலை குறைந்த ஆயுதங்களுக்கு மாறியுள்ளது.
உதாரணமாக, JDAM பயன்படுத்தப்படுகிறது. இதன் சிறிய ரக வெடிகுண்டு சுமார் $1,000 மட்டுமே. சாதாரண குண்டுகளைத் துல்லியமான ஆயுதங்களாக மாற்றும் அதன் வழிகாட்டும் கருவி சுமார் $38,000 ஆகும். அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்கள் மிக வேகமாகத் தீர்ந்து வருவதால், காலியாகும் ஆயுதக் கிடங்குகளை மீண்டும் நிரப்ப அமெரிக்க நாடாளுமன்றம் கூடுதல் பாதுகாப்பு நிதியை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று இந்த விவகாரத்தை அறிந்த நபர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





