ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதே எனது விருப்பம் - டிரம்ப் கருத்து
ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் 4 வாரங்களை கடந்து நடந்து வருகிறது. போரை முடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஈரானும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற விரும்புவதாகவும், அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்றும் பைனான்சியல் டைம்ஸ் (Financial Times) நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "உண்மையைச் சொல்லப்போனால், ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்" என்று கூறினார். மேலும், "ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களிடம் நிறைய வாய்ப்புகள் உள்ளன," என்றார்.
ஈரானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டபோது, "அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அதை மிக எளிதாகக் கைப்பற்றிவிட முடியும்” என்று குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் வேளையில் இந்த நேர்காணல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் குறித்தும் டிரம்ப் கருத்து தெரிவித்தார். அதாவது, “முஜ்தபா கமேனி இறந்துவிட்டார் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை” என்று கூறினார்.
30 03 2026





