செவ்வாய், 24 மார்ச், 2026

எரிசக்தி விலைகளை குறைக்க முயற்சி; ட்ரம்பின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்

 

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு, எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2 நாட்களில் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு "முழுமையான தீர்வு காண்பது குறித்து மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல்கள்" இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஈரானுடன் "ஆக்கபூர்வமான" பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை மீறி, அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகள் எதுவும் இல்லை என்று ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி கூறியுள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் தாக்கி ஈரான் பதிலடி கொடுக்கும் என்று கேள்விப்பட்டதால்தான் டிரம்ப் பின்வாங்கியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்க கூறியுள்ளது, எரிசக்தி விலையைக் குறைப்பதற்கும், தனது இராணுவத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் வாங்குவதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதி" என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே "எந்தவொரு பேச்சுவார்த்தையும்" நடைபெறவில்லை என்று அரசுடன் இணைந்த மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் கூறியது என்ன?

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு "முழுமையான மற்றும் ஒட்டுமொத்த தீர்வு" குறித்து வாஷிங்டனும் தெஹ்ரானும் "மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு எண்ணெய் விலை 13 சதவீதம் வரை சரிந்தது, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தையும் உயர்ந்தது.

அதிபர் டிரம்ப் தனது பதிவில், "அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2 நாட்களில் மிகச் சிறந்த உரையாடல்கள் நடந்துள்ளன என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க போர் அமைச்சகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

'கடுமையான எச்சரிக்கை'

டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டது: "ஈரானின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பின்வாங்கினார். உலகின் கச்சா எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதியைத் சுமந்து செல்லும் முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்றும் எரிசக்தி சந்தைகள் சீரற்றதாகவே இருக்கும் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக டாஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் டாஸ்னிம் கூறியுள்ளது. நிதிச் சந்தை அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதில் இருந்து அமெரிக்க அதிபர் பின்வாங்கியுள்ளதாகவும், ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அந்தச் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.

நாங்கள் போரைத் தொடங்கவில்லை- ஈரான்

பதற்றத்தைக் குறைக்க அண்டை நாடுகளிடமிருந்து "முயற்சிகள்" மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "அவை அனைத்திற்கும் எங்களது பதில் தெளிவாக உள்ளது: இந்த போரைத் தொடங்கிய தரப்பு நாங்கள் அல்ல, எனவே இந்த கோரிக்கைகள் அனைத்தும் வாஷிங்டனுக்கே அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 
மத்திய ஆசியாவில் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்களுடன் இந்த போர் தொடங்கியது. அந்தத் தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல மூத்த இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நிறுத்தத்திற்கு முன்னதாக ஒரு காலக்கெடு

முன்னதாக, நேற்று முன்தினம் (மார்ச் 21) இரவு ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணிநேர காலக்கெடுவை வழங்கியிருந்தார். ஈரான் 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்கவில்லை என்றால், அமெரிக்கா அவர்களின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும்," என்று டிரம்ப் எழுதியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த ஈரான், அமெரிக்காவிற்குச் சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உப்பகற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தியை "முழுமையாக மூடிவிடுவோம்" என்றும் அது மிரட்டியது குறிப்பிடத்தக்கது,


source https://tamil.indianexpress.com/international/iran-rejects-trump-claims-talks-strait-of-hormuz-power-plants-11256807