புதன், 11 மார்ச், 2026

புதுச்சேரி வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்: அமைதிக்கு ஆபத்து - எம்பி வைத்திலிங்கம் கடும் கண்டனம்

 

Puducherry Waqf Board appointment controversy 2026, V Vaithilingam MP protest Waqf Board

Puducherry

புதுச்சேரி:

புதுச்சேரி வக்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் (RSS) பின்னணி கொண்ட இந்துக்களை உறுப்பினர்களாக நியமித்திருப்பது மாநிலத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும் என புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் இன்று (11.03.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, முக்கியமான பதவிகளை நிரப்பும்போது முறையான ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றுவது இல்லை. சட்டமன்றத்தில் விவாதித்தோ அல்லது எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியோ பதவிகளை நிரப்ப வேண்டிய குறைந்தபட்ச அரசியல் நாகரிகத்தைக் கூட இந்த அரசு கடைபிடிக்கவில்லை. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் 7 பேர் கொண்ட புதிய வக்பு வாரியத்தை அரசு நியமித்துள்ளது. இதில் முதல்முறையாக 2 இந்துக்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வைத்திலிங்கம், குறிப்பாக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களை நியமித்திருப்பது உள்நோக்கம் கொண்டது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுவாகவே முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை வக்பு வாரியத்தில் உறுப்பினர்களாக நியமித்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது." என அவர் சாடியுள்ளார்.

புதுச்சேரியில் அனைத்து சமுதாயத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வக்பு வாரியத்தின் பெயரில் பிற மதத்தினரின் சொத்துக்களோ, தனிநபர் சொத்துக்களோ ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில், வக்பு வாரியத்தில் இந்துக்களை நியமிக்க வேண்டிய எந்த அவசியமும் எழவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் இந்த நியமனம், முஸ்லிம் மக்களிடையே தேவையற்ற கசப்புணர்வையும், சமுதாயத்தில் மோதல்களையும் உருவாக்கும் என அவர் எச்சரித்துள்ளார். எனவே, பொது அமைதியைக் கருத்தில் கொண்டு, வக்பு வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ள அந்த இரண்டு இந்து உறுப்பினர்களையும் உடனடியாக நீக்க வேண்டும்" என்று புதுச்சேரி அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/puducherry-waqf-board-appointment-controversy-2026-v-vaithilingam-mp-11194754