அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்திற்கு 'நோ'... 5 நிபந்தனைகளுடன் ஈரான் புதிய போர்க்கொடி
அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் என்ன?
பாகிஸ்தான் தூதர்கள் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்காவின் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்; ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துதல், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, அதே சமயம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பை அனுமதித்தல், ஏவுகணை சோதனைகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகக் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குதல்.
ஈரான் முன்வைக்கும் 5 அதிரடி நிபந்தனைகள்
அமெரிக்காவின் திட்டத்தை நிராகரித்த ஈரான், போர் நிறுத்தத்திற்கு 5 நிபந்தனைகளை விதித்துள்ளது. போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு கட்டாயமாக நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் படுகொலைகளை (Assassinations) உடனடியாக நிறுத்த வேண்டும், ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதமளிக்க வேண்டும், ஈரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து 'எதிர்ப்புப் படைகள்' (Resistance Groups) மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் இறையாண்மையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், களத்தில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் தொட்டி தீப்பற்றி எரிந்தது. ஈரானின் அரசு உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இன்று மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. கஸ்வின் (Qazvin) நகரில் குண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பகுதியில் 8 ட்ரோன்களை அந்நாட்டு ராணுவம் அழித்துள்ளது.
அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் "சரியான நபர்களிடம்" பேசி வருவதாகக் கூறினாலும், ஈரான் அதனை மறுத்துள்ளது. இதற்கிடையில், மத்திய கிழக்கிற்குத் தனது பாராசூட் படை வீரர்களை (Paratroopers) அமெரிக்கா அனுப்பத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மையப்புள்ளிகளாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ஈரான் விரும்பும் நேரத்தில், ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடியும் எனத் தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.
25 3 2026





