வியாழன், 12 மார்ச், 2026

வானில் இருந்து விழுந்த மர்ம சிவப்பு ஒளித்தூண்... அலறிய மக்கள்; பின்னணியில் உள்ள அறிவியல்!

 

Mysterious bright red pillars

வானில் இருந்து விழுந்த மர்ம சிவப்பு ஒளித்தூண்... அலறிய மக்கள்; பின்னணியில் உள்ள அறிவியல்!

கடந்த புதன்கிழமை இரவு, அமெரிக்காவின் நார்மன் நகர மக்கள் வழக்கம்போல உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். இரவு 11:40 மணி இருக்கும். திடீரென நகரின் கிழக்குப் பகுதியில் வானத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான ஒளித்தூண் பூமியை நோக்கிப் பாய்வதைக் கண்டு மக்கள் உறைந்து போயினர். அது என்ன? விண்கல்? அல்லது வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலமா? என சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்தன. ஆனால், விஞ்ஞானிகள் இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு பிரமிக்கத்தக்க அறிவியல் ரகசியத்தை உடைத்துள்ளனர்.

இந்த மர்ம ஒளி, 'ரெட் ஸ்பிரைட்ஸ்' (Red Sprites) எனப்படும் மிகவும் அரிதான ஒரு வளிமண்டல நிகழ்வு ஆகும். நாசா விளக்கத்தின்படி, இவை பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையில், அதாவது சுமார் 50 முதல் 90 கிலோமீட்டர் உயரத்தில் நிகழும் மின் வெளியேற்றங்கள் ஆகும். இவை பார்ப்பதற்கு ஒரு பிரம்மாண்டமான ஜெல்லிமீன் (Jellyfish) வடிவிலோ அல்லது வானிலிருந்து பூமிக்கு இறங்கும் சிவப்பு நிறத் தூண்கள் போலவோ காட்சியளிக்கும்.

இது எப்படி உருவாகிறது? சாதாரண மின்னல்கள் மேகங்களுக்குள்ளே அல்லது மேகத்திலிருந்து பூமிக்கு வரும். ஆனால் 'ரெட் ஸ்பிரைட்ஸ்' முற்றிலும் மாறுபட்டவை. ஒரு பலமான இடியுடன் கூடிய மழையின் போது, ஒரு சக்திவாய்ந்த 'நேர்மறை மின்னல்' (Positive Lightning) பூமியைத் தாக்கும். அந்த மின்னல் ஏற்படுத்திய அதீத மின்புலம் (Electric Field), மேகங்களுக்கு மேலே உள்ள மெல்லிய வளிமண்டலத்தில் ஒரு மின்சார மாற்றத்தை உண்டாக்கும். இதன் விளைவாகவே, கண்ணிமைக்கும் நேரத்தில் (மில்லி விநாடிகள்) அந்த அடர் சிவப்பு நிற ஒளிப்பிழம்பு தோன்றி மறைகிறது.

இந்நிகழ்வு பார்ப்பதற்கு ஏதோ ஆபத்து விளைவிக்கப்போவது போலத் தோன்றினாலும், பூமியில் இருக்கும் மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. முன்பெல்லாம் இவை வெறும் கதைகளாகவே இருந்தன. ஏனெனில் இவை மிக உயரத்தில் தோன்றுவதாலும், 1 நொடிக்கும் குறைவான நேரமே நீடிப்பதாலும் சாதாரணக் கேமராக்களில் பதிவு செய்ய முடியாது. ஆனால், தற்போதுள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் இவை ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

'ப்ளூ ஜெட்ஸ்' (Blue Jets), 'எல்வ்ஸ்' (Elves) போன்ற வளிமண்டல மின்சார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த 'ரெட் ஸ்பிரைட்ஸ்' பார்க்கப்படுகிறது. இயற்கையின் விசித்திரமான விளையாட்டு, விண்வெளிக்கும் வளிமண்டலத்திற்கும் இடையே இருக்கும் ரகசிய உறவை விஞ்ஞானிகளுக்குப் புரிய வைக்கிறது.

நீங்கள் விரும்பக்கூடிய கதைகள்


source https://tamil.indianexpress.com/science/mysterious-red-pillar-of-light-falls-from-space-what-really-happened-in-oklahoma-11206252