செவ்வாய், 27 அக்டோபர், 2015

சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காப்பாற்றியுள்ளனர்.

Murali Malai Murasu's photo.
திருச்சி: பயணத்தின்போது காய்ச்சல் அதிகமாகி வலிப்பால் அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (அக்.24) நள்ளிரவு அரசு பேருந்து ஒன்று மதுரைக்குப் புறப்பட்டது. மதுரை கோட்டம் அருப்புக்கோட்டை கிளையிலிருந்து இயக்கப்பட்டு வரும் அந்தப் பேருந்தில் ஓட்டுநர் ராமர், நடத்துநர் பாஸ்கரன் பணியாற்றினர். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அதில் சேலத்திலிருந்து மதுரைக்குப் பயணம் செய்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை அபினவதனுக்கு காய்ச்சல் அதிகமாகி, வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சக பயணிகள், இதுகுறித்து நடத்துநர் பாஸ்கரனிடம் தெரிவித்தனர். அப்போது பேருந்து பஞ்சப்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. திருச்சி நகர எல்லையைத் தாண்டினால் மருத்துவமனை இருக்காது என்பதால், மீண்டும் பேருந்தை திருச்சிக்கு திருப்பிய ஓட்டுநர் ராமர், எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சக பயணிகளும் பொறுமையாக பேருந்தில் காத்திருந்தனர்.
"குழந்தை குறைந்தபட்சம் சில மணி நேரமாவது மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்" என்று மருத்துவர்கள் கூறியதால், குழந்தையின் பெற்றோரை விட்டுவிட்டு, சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து மதுரைக்குப் புறப்பட்டு சென்றது.
குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு கொண்டு வந்து காப்பாற்றிய அரசு ஓட்டுநர் ராமரையும், நடத்துநர் பாஸ்கரனையும் பயணிகள் பாராட்டினர்.