இயற்கை முறை உணவுப் பொருட்கள் பிரபலமாகி வரும் நிலையில் அடுத்த கட்டமாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளும் வரவேற்பு பெற்று வருகின்றன. அது பற்றி இப்போது பார்க்கலாம்
புதுப்புது தொழில்நுட்ப வசதிகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் இயற்கை சார்ந்த விஷயங்களும் அவர்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இயற்கை சாயங்கள் கொண்டு தயாரிக்கப்படும் சேலைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள கைத்தறிப் பட்டு உற்பத்தியாளர்கள் மலர்கள் மற்றும் செடிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாயங்களை கொண்டும் மூலிகைச் சாயங்களை கொண்டும் புடவைகளை நெய்யத் தொடங்கியுள்ளனர்
இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட ஆடைகள் தோல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. மேலும் துணிகளுக்கு ஏற்றப்படும் செயற்கை சாயங்களால் விவசாய நிலங்களும் குடிநீர் ஆதாரங்களும் பாழ்பட்டு வரும் அவலம் உள்ளது.
இந்நிலையில் இயற்கை சாயம் கொண்ட உடைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் காத்த திருப்தியும் கிடைக்கும். இயற்கை ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இத்தகைய ஆடைகளுக்கான தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இயற்கை சாயங்களைக் கொண்டும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லியின்றி விளைவிக்கப்பட்ட பருத்தியாலும் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கென உலகளவில் மிகப்பெரிய சந்தை உருவாகி வருகிறது. இதனால் திருப்பூரிலிருந்தும் இயற்கை முறை ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது அதிகரித்துவருகிறது.
தமிழக அரசு அமைப்பான கோ ஆப்டெக்சும் கடந்த ஓராண்டாக ஆர்கானிக் சேலைகளை விற்று வருகிறது. இயற்கை காக்க வர்த்தக ரீதியில் எடுக்கப்பட்டு வரும் இத்தகைய முயற்சிகள் நிச்சயம் வரவேற்கத்தக்கதே