செவ்வாய், 20 அக்டோபர், 2015

காஷ்மீர் எம்.எல்.ஏ மீது கருப்பு மை வீச்சு : மாட்டு இறைச்சி விவகாரத்தில் இந்து அமைப்பு அத்துமீறல்


டெல்லியில் ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ ஷேக் அப்துல் ரஷீத் மீது அடையாளம் தெரியாத சிலர் கருப்பு மை ஊற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் தாத்ரியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காக இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ. ரஷீத் மாட்டு இறைச்சி விருந்து அளித்தார். இதற்காக காஷ்மீர் சட்டசபையில் அவர் மீது பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தாக்குதல் நடத்தினார்கள்.


இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்த 19 வயது இளைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க எம்.எல்.ஏ ரஷித் டெல்லி வந்திருந்தார்.


பின்னர் பத்திரிகையாளர்களை ரஷீத் சந்தித்தபோது, அங்கு வந்த சிலர் பசுக்கள் அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறியபடியே எம்.எல்.ஏ ரஷீத் மீது கருப்பு மையை ஊற்றினர். இதுதொடர்பாக 2 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.