செவ்வாய், 5 ஜனவரி, 2016

உள்நாட்டு பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்: போலி சிம்கார்டுகளால் எழுந்த பேராபத்து


நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில், நுகர்வோருக்குத் தெரியாமலேயே, அவர்களது அடையாள சான்றுகளை பிரதி எடுத்து, சிம்கார்டுகள் ஆக்டிவேட் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் விபரீதம் அரங்கேறியுள்ளது.

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூருக்கு நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும், பிற நாட்டினரும் வந்து செல்வது சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. வெளிநாட்டினர் ஈடுபட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் நிலையில், திருப்பூரில், வாடிக்கையாளர் ஒருவரது சான்றிதழ்களை, நூற்றுக்கணக்கான பிரதிகள் எடுத்து, அவருக்கு தெரியாமலேயே, சிம் கார்டுகள் பெறப்பட்டு, ஆக்டிவேட் செய்யப்பட்டு விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது.

நாட்டு பாதுகாப்பிற்கு சவால்விடும் இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அடையாளம் தெரியாத நபர் ஒருபக்கம் இருக்க அவர் பயன்படுத்தும் செல்போன் எண் உரிமையாளர், வேறு ஒருவராக இருக்கும் நிலை உள்ளது. இந்த ஆபத்தை அறியாமலேயே ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர் என்பது தான் இதில் அதிர்ச்சிகர உண்மை.

இந்த போலி சிம்காடு குறித்த புகார்கள் எழுந்ததும், போலி சிம் கார்டுகள், விண்ணப்பங்களை போலீசார் கைப்பற்றி ஐந்து நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர், திருப்பூர் மக்கள்.


இந்த நிலையில், போலியாக, நுகர்வோரின் அடையாள சான்றுகளை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான சிம்கார்டுகளை பெற்று ஆக்டிவேட் செய்து விற்பனை செய்த புகாரில், திருப்பூர் பி.என்.சாலையில் உள்ள காமாட்சி ஏஜென்சி உரிமையாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.