'யாகூப் மேமன் தீவிரவாதி என்று சொல்லி நீதிமன்றம் தண்டித்த பிறகும், அவருக்கு ஆதரவாக கூட்டம் நடத்துவது தேசவிரோதச் செயல். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அதைத்தான் செய்தார் ரோஹித். இதை எப்படி அனுமதிக்க முடியும்? எனவேதான் மத்திய அரசு அதில் தலையிட்டது' என்று டிவி விவாதத்தில் சொன்னார், பா.ஜ.க.வின் ஆசீர்வாதம் ஆச்சாரி.
அதாவது நீதிமன்றத் தீர்ப்பை மீறுவது தேச விரோதச் செயலாம். எனவேதான் அரசால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லையாம்.
இதோ, சென்னையில் தனியார் உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியில் இறக்கிவிடப்பட்டு மூன்று தலித்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 'அரசோ தனியாரோ யாருமே இனி கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது' என்றும் நீதிமன்றம்தான் சொல்லியுள்ளது. ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை நீதிமன்றம் இதில் கடுமை காட்டியுள்ளது. உச்சநீதி மன்றம் தீர்ப்பே வழங்கியுள்ளது. ஆனாலும், அரசும் தனியாரும் அதை மதிக்காமல் அப்பட்டமாக மீறி வருகின்றனர். மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதிலும் எல்லா மனிதர்களும் அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமே அதற்குப் பயன்படுத்தும் இழிவு தொடர்கிறது.
'இதை எப்படி அனுமதிக்க முடியும்' என, ஆசீர்வாதம் ஆச்சாரி கேள்வி எழுப்பியதில்லை. இது தேசவிரோதச் செயலாக இவர்களின் கண்ணுக்குத் தெரிவதுமில்லை. இதில் தலையிட அரசு ஆர்வம் காட்டியதில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை ஒரு பொருட்டாகவே இவர்கள் கருதியதுமில்லை.
இனி, நீதிமன்றத் தீர்ப்பு அது இதுன்னு இவனுங்க நமக்கு பாடம் எடுக்க வந்தால் என்ன செய்யலாம்?