புதன், 13 ஏப்ரல், 2016

சண்டிகரில் இரண்டு குடிநீர் பாட்டிலை 312 ரூபாய்க்கு விற்ற ஹோட்டலுக்கு 27 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஜக்வீர் சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 2015 ஜுன் 20-ம் தேதி இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார், சுமார் 70 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்ட அவர் , சாலையோரத்தில் இருந்த உணவு விடுதிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அப்போது சாப்பிடும் போது இரண்டு சீலிடப்பட்ட குடிநீர் பாட்டில்களை வாங்கினார். அதன் விலை 312 ரூபாய் என்று அந்த ஹோட்டலில் விலை கூறப்பட்டது. இதனைக் கண்டு ஜக்வீர் சிங் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த பாட்டிலில் வரிகள் உள்பட 60 ரூபாய் என்று போட்டிருந்தது. ஆனால் உணவு விடுதியோ ஒரு பாட்டிலை 156 ரூபாய் என்ற அளவில் இரண்டு பாட்டிலை 312 ரூபாய்க்கு விற்றது.
இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் மீது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜக்வீர் சிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 312 ரூபாய்க்கு இரண்டு குடிநீர் பாட்டிலை விற்ற ஹோட்டல் நிர்வாகம், ஜக்வீர் சிங்கிற்கு நஷ்ட ஈடாக 12,000 ரூபாய் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஹோட்டல் நிர்வாகம் 15 ஆயிரம் ரூபாய் அபராதமாக நுகர்வோர் சட்ட உதவி மையத்தில் கட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.