புதன், 13 ஏப்ரல், 2016

டான்சில்

டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி. தொண்டையில் சதை வீங்குவதை டான்சில் என்று மக்கள் பொதுவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் டான்சில் தொல்லை தரும் என்று தெரிந்துவைத்திருக்கிறார்கள். இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
டான்சில் என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. இது இயற்கையாகவே நம் வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும் உள்ள டான்சில், நாக்குக்கு அடியில் உள்ள டான்சில், மூக்குக்குப் பின்னால் உள்ள டான்சில் என மூன்று வகைப்படும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகின்றன.
தொண்டை டான்சில்
நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’எடுத்து ஆராய்ந்து, அது பற்றிய தகவல்களை உடனே மூளைக்குத் தெரிவிக்கிற வேலையைத் தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. அதாவது, ஒரு வாயிற்காவலர் அலுவலகத்துக்கு வரும் நபரைத் தீர விசாரித்து, அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் `இன்னமாதிரியான ஆள் உள்ளே வருகிறார்’ என்ற தகவலைச் சொல்லி, உள்ளே அனுப்புவது போல், டான்சில்களும் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை நம் உடலில் செய்கின்றன. வந்திருக்கிற கிருமிக்கு நம்முடைய உடலில் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்த இது உதவுகிறது.
டான்சில் வீங்குவது ஏன்?
சில சமயங்களில் கிருமிகளை ஆராயும்போது, அந்தக் கிருமிகள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்குமானால், முதலில் டான்சில்கள் அந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்டுவிடும். காய்ச்சல், தடுமம் பிடிக்க ஆரம்பிக்கும், முன்பக்கத் தொண்டை வலிப்பது இதனால்தான். டான்சில் திசுக்கள் தொடர்ந்து இந்தக் கிருமிகளோடு போராடும்போது, தொண்டையில் இரண்டு பக்கமும் உள்ள டான்சில்கள் ஒட்டுமொத்தமாக வீங்கிவிடும். இதைத்தான் ‘டான்சில் அழற்சி’ (Tonsillitis ) என்கிறோம்.
இப்படி டான்சில்கள் வீங்குவதற்குப் பொதுவான காரணம் ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாகஸ்’எனும் பாக்டீரியா கிருமிதான். இதைத் தவிர, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்கத்தாலும் இப்படி ஏற்படலாம்.
யாருக்குப் பாதிப்பு அதிகம்?
பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டான்சில் பாதிப்பு அதிகம் ஏற்படும். அடிக்கடி சளி, ஜலதோஷம், சைனஸ், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு, ஊட்டச்சத்துக் குறைந்தவர்களுக்கு, காற்றுப் போக வழியில்லாமல் மிகவும் நெருக்கமான இடங்களில் வசிப்பவர்களுக்கு, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு டான்சில் வீக்கம் அதிகமாகத் தொல்லை தரும்.
ஐஸ்கிரீம், குச்சி ஐஸ், ஃபிரிட்ஜிலிருந்து உடனே எடுத்துச் சாப்பிடப்படும் பதார்த்தங்கள், குளிர்பானங்கள், குளிர்ச்சியான தட்பவெப்பநிலை போன்றவை டான்சில் வீக்கத்துக்குத் துணை செய்யும். மிகவும் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிடும்போது, அந்தப் பொருட்களின் அதீத குளிர்ச்சியானது டான்சில் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்துவிடும். இது டான்சில்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். அப்போது கிருமிகள் பலம் பெற்று டான்சில்களைத் தாக்கிவிடும். இதன்விளைவாக டான்சில்கள் வீங்கிவிடும்.
வீக்கத்தில் இரண்டு வகை
டான்சில் வீக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று, ‘திடீர் டான்சில் வீக்கம்’ (Acute Tonsillitis). மற்றொன்று, ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ (Chronic Tonsillitis) . முதலாம் வகையில் தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, இருமல், உணவை விழுங்கும்போது வலி, காது வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்குக் கழுத்தில் நெரி கட்டும். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை முறையாகக் கொடுத்துவிட்டால், பாதிப்பு முற்றிலும் குணமாகிவிடும்.
முதல்முறையாக டான்சில்கள் வீங்கும்போது சரியானமுறையில் சிகிச்சை பெறாதவர்களுக்கும் தற்காப்பு நடவடிக்கை களை எடுக்கத் தவறியவர்களுக்கும் டான்சில் பாதிப்பு அடிக்கடி ஏற்படும். அப்போது டான்சில்களின் நோய் எதிர்ப்புச் சக்தியானது நிரந்தரமாகவே குறைந்துவிடுவதால், கிருமிகளின் பாதிப்பும் நிரந்தரமாகிவிடும். அதனால் டான்சில் வீக்கம் நீடிக்கும். இதை ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ என்று சொல்கிறோம்.
என்ன ஆபத்து?
நாட்பட்ட டான்சில் வீக்கத்தால் அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டை வலி நிரந்தரமாகிவிடும். பசி குறையும். குழந்தையின் எடை குறையும். டான்சிலில் சீழ் பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். காதில் சீழ் வடியும். கேட்கும் திறன் குறையும். கழுத்தில் நெறிகட்டுதல் நிரந்தரமாகிவிடும். சைனஸ் தொல்லை நீடிக்கும். இதனால் தலைவலி அடிக்கடி வரும். சிறு குழந்தைகளும் குறட்டை விடும். குரல் கரகரப்பாக மாறிவிடும். மேலும், டான்சிலில் குடியிருக்கும் கிருமிகள் சில நச்சுப் பொருட்களை வெளிவிடும். இவை ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்குள் ‘சுற்றுலா’ செல்லும். இதனால் சிறுநீரகம், எலும்பு மூட்டுகள், இதயம், நுரையீரல் போன்றவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அடினாய்டு டான்சில்
மூக்கில் உள்ள டான்சிலை ‘அடினாய்டு டான்சில்’ (Adenoid Tonsil) என்கிறோம். மூக்கு வழியாக வரும் காற்றில் உள்ள கிருமிகளை அடையாளம் காணும் வேலையை இந்த அடினாய்டு டான்சில் செய்கிறது. பிறந்த குழந்தை வளர வளர அடினாய்டு டான்சிலும் வளர்ந்துகொண்டே வரும். ஏழு வயதை நெருங்கும்போது இது சற்றுப் பெரிதாகவே காணப்படும். அப்போது பலம் வாய்ந்த கிருமிகளால் தாக்கப் படுமானால், இது வீங்கி மூக்கின் பாதையை அடைத்துவிடும். அப்போது குழந்தைகள் வாய் வழியாகச் சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி வாய் வழியாகச் சுவாசிப்பதால், இவர்களுக்குப் பற்கள் துருத்திக்கொண்டு வளர ஆரம்பிக்கும். தெற்றுப் பற்கள் உண்டாகும்.
சிகிச்சை என்ன?
திடீர் டான்சில் வீக்கத்தை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். நாட்பட்ட வீக்கத்துக்கு ஆபரேஷன்தான் கைகொடுக்கும். இப்போது லேசர் சிகிச்சை அல்லது ‘ரேடியோ ஃபிரீகுவன்சி அப்லேசன்’ (Radio frequency ablation) எனும் நவீன சிகிச்சையில் துளியளவு ரத்தம்கூட சிந்தாமல், வலியே இல்லாமல், மிக துல்லியமாக டான்சில்களை அகற்றமுடியும். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் டான்சில் பிரச்சினை வருவதில்லை.
அறுவை சிகிச்சை தேவையா?
டான்சில் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என பெற்றோர்கள் குழம்பிப் போகிறார்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். கோட்டைக்குக் காவல்காரன் தேவைதான். காவல்காரனே ஒற்றனாக மாறிவிட்டால், அந்தக் காவல்காரனை அரசன் வேலைக்கு வைத்திருப்பானா? அடுத்த நிமிடம் வெளியேற்றிவிடுவான்தானே? அது மாதிரிதான், அடிக்கடி தொல்லை கொடுக்கும் டான்சில் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வு.
அறுவை சிகிச்சை எப்போது தேவை என்பதை இங்கே சொல்லிவிடலாம். ஆண்டுக்கு மூன்று முறைக்கு மேல் டான்சில் பிரச்சினை ஏற்படுதல், டான்சில் பாதித்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது, அடிக்கடி வாந்தி எடுப்பது, சாப்பிட முடியாத நிலைமை, உடல் எடை குறைவது, டான்சில் வீக்கத்தில் சீழ் பிடிப்பது, அடிக்கடி காதுவலி, காதில் சீழ், காது கேட்பது குறைவது, வாய்வழியாக மூச்சுவிடுவது, குறட்டை விடுவது போன்ற பிரச்சினைகள் தொடரும்போது அறுவை சிகிச்சை அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுமா?
டான்சில் அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை. காரணம், குழந்தைக்கு 5 வயதாகும் வரைதான் நோய்ப் பாதுகாப்புப் பணியில் டான்சில்கள் பிரதானமாகப் பங்களிக்கின்றன. அதற்குப் பிறகு உடலில் உள்ள மற்ற நிணநீர்ச் சுரப்பிகள் இந்தப் பாதுகாப்பு வேலையைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆகவே, டான்சில் களை அகற்றிவிட்டாலும் குழந்தைக்கு எப்போதும்போல் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும்.
தடுப்பது எப்படி?
# இளம் சூடான தண்ணீரில் சிறிதளவு சமையல் உப்பைக் கலந்து காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவில் படுக்கச் செல்லும்போது ஒருமுறை வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் டான்சில் பிரச்சினை குறையும்.
# எப்போதும் சுத்தமான குடிநீரைக் குடிக்க வேண்டும். சுத்தமான உணவைச் சாப்பிட வேண்டும். முக்கியமாக, திறந்தவெளிக் கடைகளிலும் சாலையோரக் கடைகளிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
# ஐஸ்கிரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான உணவு வகைகளையும் குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
# மிகவும் சூடான, காரமான உணவு வகைகளும் வேண்டாம்.