திங்கள், 4 ஏப்ரல், 2016

தலைமை செயலக வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு; எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அமைக்கப்ப


hkpy5Z7hdasdfgசென்னை தலைமை செயலக வளாகத்தில் 16-ம் நூற்றாண்டு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இது அமைக்கப்பட்டதா? என்று ஆய்வு நடத்தப்படுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை

இந்தியாவில், 16-ம் நூற்றாண்டில் வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் சென்னைக்கு வந்தனர். இதற்காக ஆங்கிலேய அதிகாரிகளான பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் முயற்சியால் 1639-ம் ஆண்டு சந்திரகிரி ராஜா என்ற அரசரிடம் இருந்து இடத்தை வாங்கி புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். அந்த காலங்களில் பெரும் வணிக மையாக விளங்கிய இந்த பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் உள்பட வெளிநாட்டவர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்காக பாதுகாப்பு நிறைந்த இந்த கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள்.

இந்த கோட்டையை சுற்றிலும் 6 மீட்டர் உயரத்துக்கு பிரமாண்டமான சுவர்கள் அமைக்கப்பட்டது. அதை சுற்றி 50 அடி அகலத்துக்கு அகழிகள் அமைக்கப்பட்டன. வங்காள விரிகுடா கடல் வழியாக எதிரிகள் கோட்டைக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக அகழிகள் மற்றும் கோட்டை சுவற்றின் மேலே ஆங்காங்கே பெரிய பீரங்கிகள் அமைக்கப்பட்டன. இது தவிர ரகசிய சுரங்கப்பாதைகளையும் ஆங்கிலேயர்கள் அமைத்திருந்தனர்.

பலகை விழுந்தது

கோட்டைக்கு வருவதற்கு நான்கு வழிகள் உள்ளன. கோட்டையின் கிழக்குப்பகுதியில் 2 நுழைவு வாயில்களும், மேற்கு பகுதியில் கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து வரும் பாதை மற்றும் தீவுத்திடல் அருகில் ஒரு பாதையும் உள்ளது.

இந்த நிலையில் புனித ஜார்ஜ் கோட்டையின் கிழக்குப் பகுதியில் வாகனங்கள் வெளியே செல்லும் பகுதியில் கேட் எண் 4-க்கு எதிரில் துவாரம் போன்ற பகுதி நீண்ட நாட்களாக மரப்பலகையால் மூடப்பட்டிருந்தது. அந்த பலகை திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது அந்த துவாரம் வழியே படிக் கட்டுகள் காணப்பட்டன. 

சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

பெரிய பலகை விழுந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதுகுறித்து தொல் பொருள் ஆய்வுத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள் சிறிது தூரம் நடந்து சென்று பார்த்தனர். அதன் வலதுபுறம் சுவர் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் மட்டும் நீண்ட தூரத்துக்கு பாதை செல்கிறது. சிறிது தூரம் சென்றதும் இருட்டாக இருந்ததால் அதற்கு மேல் செல்ல முடியாது என்பதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர். அந்த சுரங்கப்பாதைக்குள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக மீண்டும் பலகை வைத்து அடைக்கப்பட்டு விட்டது.

இதுகுறித்து தொல் பொருள் ஆய்வுத்துறை துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:-

20 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டையின் மேற்கு பகுதியில் இதே போன்ற துவாரம் காணப்பட்டது. இதை தொடர்ந்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட போது அது சுரங்கப்பாதை என்று தெரியவந்தது. குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியாத அளவுக்கு இருட்டாக இருந்ததால் அன்று அந்த பாதையை அப்படியே மூடி விட்டார்கள். அந்த சுரங்கப்பாதையின் மற்றொரு பகுதியாக தான் இந்த புதிய சுரங்கப்பாதை இருக்கலாம்.

எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க…

புனித ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டிய போதே 16-ம் நூற்றாண்டிலேயே இந்த சுரங்கப்பாதையை அமைத்துள்ளனர். 3 அடி அகலம், 6 அடி உயரத்துக்கு இரண்டு அல்லது 3 பேர் செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரைக்கு மேலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சென்றால் வெளியே தெரிந்து விடும் என்பதற்காக பூமிக்கு கீழே கோட்டையின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கேற்றவாறு இந்த ரகசிய சுரங்கப்பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்திருக்கலாம். கோட்டையின் கிழக்குப்பகுதியையும், மேற்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. சுரங்கப்பாதையின் உள்பகுதி சுண்ணாம்பினால் பூசப்பட்டு வழவழப்பாக உள்ளது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும், ஆயுதங்களையும், வீரர்களையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் இந்த சுரங்கப்பாதையை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியிருக்கலாம். இதுபற்றி முழுமையாக ஆய்வு நடத்தினால் மேலும் பல தகவல்கள் தெரியவரலாம்.

கோட்டை கொடி மரத்தின் கீழ் உள்ள அறையில் 3 பெரிய பீரங்கிகள் உளளன. அதை வெளியே கொண்டு வர முடியாது என்பதால் அதை அப்படியே அங்கேயே விட்டுள்ளோ£ம். புதிதாக கண்டுபிடித்துள்ள சுரங்கப்பாதை மற்றும் கொடி மரத்தின் கீழ் உள்ள பீரங்கிகளை புகைப்படம் எடுத்து கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.