கடையநல்லூரில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென கோடை மழை பெய்தது. சாரலாக தொடங்கி இடி- மின்னலுடன் பலத்த மழையாக மாறியது. அப்போது சூறை காற்றும் வீசியது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் கற்பகசுந்தரவிநாயகர் கோவில் தெருவில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த சிறுவர்கள் ஆலங்கட்டிகளை கைகளில் பிடித்து விளையாடினர்.
ஆலங்கட்டி மழையை பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென வானத்தில் இருந்து மீன்கள் வந்து விழுந்தன. வீட்டு கூரைகளின் மேல் ஏராளமான மீன்கள் வந்து விழுந்ததை கண்ட பொதுமக்கள் மீன் மழை பெய்வதாக நினைத்து ஆச்சரியமடைந்தனர்.
அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் இது குறித்து கூறும் போது, `இடி- மின்னலுடன் மழை பெய்த போது திடீரென மீன்கள் வீட்டின் கூரை மீது வந்து விழுந்தன. இறந்த நிலையில் விழுந்த அந்த மீன்கள் அப்போது தான் பிடிக்கப்பட்டது போன்று இருந்தன. அவற்றின் தலையில் மட்டும் காயம் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதன் பின்னர் இப்போது தான் பெய்துள்ளது.
ஆனால் மீன் மழை பெய்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை’ என்றார்.
இந்த தகவல் பரவியதால் கற்பகசுந்தர விநாயகர் கோவில் தெருவிற்கு பொதுமக்கள் பலர் திரண்டு வந்து அங்கு விழுந்து கிடந்த மீன்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கோடை மழையால் விசாலாட்சியம்மன் கோவில் , விஷால் நகர் ஆகிய இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்தன. இதனால் கடையநல்லூர் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டது.