“தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்”.
அல்குர்ஆன்(4:162).
மேலும், தொழுகையைப் பேணாமல் தவற விட்டவர்களுக்கு தண்டனைகள் உள்ளது என்பதையும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.
"அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன் (74: 40 - 44).
தொழுகையாளிகளுக்கு கூலிகளும், தொழாதவர்களுக்கு தண்டனைகளும் இருப்பதைப் போன்றே தொழுதும் அலட்சியத்தையும், சோம்பலையும் தவிர்க்காதவர்களுக்கு கடும் கண்டனத்தையும் திருக்குர்ஆன் பதிவு செய்கிறது.
“தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான்”.
அல்குர்ஆன் (107: 4, 5).
“நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்.
அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர்.
குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்”.
அல்குர்ஆன் (4: 142).