ஸ்வாதிக்கு யாரும் உதவி செய்யலைன்னு சுலபமா சொல்லிட்டு போயிடுறாங்க ஆனா உதவி செய்யுறவங்களுக்கு இந்த அரசு எந்தவிதமான நெருக்கடிகளை கொடுக்குதுன்னு என்னோட அனுபவத்த சொல்லுறேன் கேளுங்க..
நான் பத்தாம் வகுப்பு தனித் தேர்வராக எழுதுவதற்கு DPI அலுவலகத்திற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதற்கான கடைசி நாள் விண்ணப்பம் கொடுப்பதற்காக ரயிலில் சென்றுகொண்டிருந்தேன்.. அப்பொழுது நான் சென்ற ரயிலில் தொங்கிக்கொண்டு வந்த ஒருவர் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை தாண்டிய கொஞ்ச தூரத்தில் விழுதுவிட்டார். யாராலோ ரயில் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. விழுந்தவருக்கு கடுமையான காயம் உடல் சேதம் என்றாலும் உயிர் இருந்தது.
பின் அதே ரயிலில் வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் நானும் அந்த உடலை எடுத்து ரயில் பெட்டியில் வைத்தோம். மாணவர்கள் நுங்கம்பாக்கம் வந்ததும் இறங்கிவிட்டனர். நான் எழும்பூர் வரை அதே ரயிலில் விழுதவருடன் வந்தேன் இடையிலேயே உயிர் பிரிந்துவிட்டது பின் எழும்பூர் வந்தது அந்த உடலை ரயில் நிலைய துப்புரவு தொழிலாளிகள் உதவியுடன் ஸ்டெச்சரில் ஏற்றி நடை மேடையில் வைத்தோம் . இதற்குள் நான் போட்டிருந்த சட்டை முழுதும் ரத்தமாகிவிட்டது..
பின் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த பொழுது தான் ஏண்டா இதை செய்தோம் என்று என்னும் அளவிற்கு ஒரு துயரம் எனக்கு நடந்தது. அங்கிருந்த ரயில்வே காவலர்கள் என்னை பிடித்துக்கொண்டு விசாரணை என்ற ரயில் நிலையத்திலேயே ஒரு அறைக்கு அழைத்து சென்று உயிரை வாங்கிவிட்டனர். செத்தவன் உனக்கு தெரிஞ்சவனா. நீ வந்த ரயில் பெட்டியில் இருந்து தான் விழுந்தானா. தானாக விழுந்தானா இல்லை யாராவது தள்ளிவிட்டார்களா. உன்னுடன் இந்த உடலை ரயில் ஏற்றிய மற்றவர்கள் எங்கே. இந்த உடலில் ஏதாவது நகை இருந்ததா போன்று கேள்வி கேட்டு கிட்டத்தட்ட 2 மணி நேரம் அதே அலுவலகத்திலேயே உக்கார வைத்துவிட்டனர்.
அன்று வேறு விண்ணப்பம் தருவதற்கு கடைசி நாள். நான் அதை சொல்லிய பொழுதும் என்னை விடவில்லை இன்ஸ்பெக்டர் வரும்வரை காத்திரு என்று சொல்லிவிட்டனர்..
அப்புறம் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வந்த இன்ஸ்பெக்டர். அங்கிருந்த அனைத்து காவலர்களையும் சின்னப்பையன போயி பிடிச்சி வைச்சிருக்கீங்கலேன்னு கேவலமாக திட்டினார். அவரிடம் சார் இன்னைக்கு விண்ணப்பம் தருவதற்கு கடைசி நாள் இவங்களால ரொம்ப லேட் ஆகிடுச்சி நான் இந்த வருஷம் பரிட்ச்சை எழுதலைனா எங்க வீட்ல திட்டுவாங்க சார்னு பொலம்பினேன். நீ கவலை படாத தம்பின்னு என்ன அவர் பைக்லையே கூட்டிகிட்டு போயி DPIல விண்ணப்பம் அவரே பூர்த்தி செய்து கொடுத்து பின் மீண்டும் ரயில் ஏத்தி விட்டுட்டு . மன்னிச்சிடு தம்பின்னு சொல்லி அனுப்பி வைச்சாரு..
ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டர் மோசமான ஆளா இருந்திருந்தா என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ..
அரசு உதவி செய்பவர்களுக்கு இது போன்ற தொடர்ச்சியான பிரச்சனைகளை தருவதால் தான் உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட ஒதுங்கி போகிறார்கள்.
உதவி செய்பவர்களுக்கு அரசு இது போன்று நடக்காது என்று உத்தரவாதம் தந்தால் நிச்சயம் இந்நிலை மாறும்...