குல்பர்க் சொசைட்டி படுகொலைகளின் தீர்ப்பு நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறுபதுக்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாப்ரி, மற்றும் குடும்பத்தார் என 69 பேர் அவர் மனைவி கண் முன்னாலேயே எரித்துக் கொல்லப்பட்டார்கள். அங்கு வந்த காவல்துறை உயர்அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நடந்த இந்த படுகொலைகளின் தீர்ப்பில் முக்கிய குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு ஆயுள் தண்டனையும், சிலருக்கு ஏழு ஆண்டு தண்டனையும் அளித்த சிறப்பு நீதி மன்றம், கொல்லப்பட்ட ஜாப்ரியையே இப்படுகொலைக்குக் காரணமாக கூறியுள்ளது. அவர் (தற்காப்புக்காக) தன் கைத்துப்பாக்கியால் சுட்டதால் தான் இந்த படுகொலை நடந்ததாக தீர்பளித்துள்ளது.
ஜாப்ரி உயிருடன் இருந்திருந்தால் நீதிபதி அவருக்கு என்றோ தூக்கு தண்டனை அளித்து இருப்பார் என்பது தெரிகிறது.
இருபதிற்கும் மேலான நேரில் பார்த்த சாட்சிகளை ஏற்காத நீதிபதி, அவர்களுக்கு மறதி நோய் உள்ளதென்றும் கூறியுள்ளது இந்த தீர்ப்பின் தரத்தை விளக்கும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி வரும் தீஸ்தா சிதல்வாட் முயற்ச்சிக்கு சிறிய வெற்றியே கிடைத்தது. ஏற்கனவே 120 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்த தீஸ்தா, இப்படுகொலைகளுக்கு முக்கிய காரணமான மோடியை, நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதன் காரணமாக தீஸ்தா மீது பல பொய் வழக்குகளை அள்ளிப் போட்டு அவரை அழிக்க வேண்டுமென்பதில் மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
தற்போது வெளிநாட்டு உதவிகளுக்கான அனுமதியை ரத்து (FCRA) செய்துள்ளது. அவர்மீது புழுதி வாரி இறைத்தால் மக்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறது.
பல்வேறு மிரட்டல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையில் குற்றவாளிகளை நீதியின் முன்னிருத்தி தண்டிக்க வேண்டும் என்று முனைப்புடன் போராடி 120 மேற்பட்டோருக்கு ஆயுள் தண்டனையும், பலருக்கு வேறு தண்டனைகளையும் வாங்கித் தந்து வரும் நிலையில் மோடி அரசு அவர் மீது பொய் வழக்குகளைப் புனைந்து கைது செய்ய பல வாரண்டுகளைப் பிறப்பித்தது.
இக்கால கட்டத்தில் நாம் அரசியல் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதை அவருக்கு அளிப்பதாக அறிவித்தோம். பல கெடுபிடிகள், அத்துமீறல்களுக்கு இடையில் அவர் விருது வாங்க சென்னைக்கு வந்த விவரங்களை தனியாக விவரிக்க வேண்டும்.
காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த சிறப்பு விழாவில் பல ஆயிரம் மக்களின் கரவொலிகளுக்கிடையில் நல்லகண்ணு ஐயாவுடன், தீஸ்தா சீதல்வாடிற்கு மகாத்மா காந்தியின் பேரனால் காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது. எந்த மிரட்டலுக்கும் கலங்காத தீஸ்தா, காயிதே மில்லத் கல்லூரியில் மக்கள் அளித்த ஆதரவில் கண் கலங்கிவிட்டார்.
இதை “வைகறை வெளிச்சம்” இதழில் மூத்த பத்திரிகையாளர் குலாம் முஹமது,
“கண்ணியமிகு காயிதே மில்லத்தின் பேரன் கண்ணியப்படுத்தினார் தீஸ்தா செட்டல்வாட்டை” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டதின் சிறு பகுதி………
“மோடி இந்தியாவின் பிரதமராகவே ஆகிவிட்டார். பிரதமரானதும் நீதித்துறையில் தனக்குரிய வேண்டிய ஆட்களை நியமித்துவிட்டார். இப்போது டீஸ்டாவின் மீதான அவதூறை இன்னும் வேகமாக மோடியால் கொண்டு செல்ல முடிந்தது. அத்தோடு கைது செய்;யும் நடவடிக்கையும் விரைவுப்படுத்திட முடிந்தது. கைது செய்யும் நாட்கள் நெருங்கி வந்து விட்டன.
இந்த நிலையில் தான் டீஸ்டா தூய்மையானவர் என நாம் நம்புகிறோம். அவர் உண்மையிலேயே நீதிக்காக போராடும் நல்லவர் என்பதை நானிலம் அறியச் செய்திட வேண்டும். எனப் பிரகடனப்படுத்தினார் கண்ணியமிகு காயிதே மில்லத்தின் பேரர் தாவுத் மியாகான் அவர்கள். அந்த வகையில் “அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது” என்பதை அப்பழுக்கற்ற பொது வாழ்க்கையை நடத்திய காயிதே மில்லத் அவர்களின் பெயரால் நிறுவி அதை நீதிக்காகப் போராடும் வீரமங்கை டீஸ்டா செட்டல்வாட்டுக்கு வழங்கினார் தாவுத் மியாகான். அவர்களுக்கும் அவர்கள் நிறுவியுள்ள காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைக்கும் நன்றிகள் பல. அவர்களுக்கு அல்லாஹ் தன் அருளைப் பொழிவானாக!
தன்னை இழிமொழிகளும், பழிசொற்களும், கைதுகளும, கொட்டடிகளும் சூழ்ந்திடும் போது இப்படி ஒரு விருதை தந்தவர்களை நினைவு கூறும்போது அவரையும் அறியாமல் கண்கள் குளமாகின.
அகமகிழ்ச்சி, நன்றிப்பெருக்கு இவற்றால் நெஞ்சம் நெகிழ்ந்து உதிர்த்த கண்ணீர் அது. அந்த கண்ணீர் வாழவைக்கும் நீதியை.
பலமுறை டீஸ்டாவுக்கு ஏதேனும் பொருளதவி செய்திட வேண்டும். நீதிக்கான அவருடைய பெரும்போரில் கடுகளடவே ஆனாலும் நாம் உதவிட வேண்டும் என பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. முஸ்லிம்கள் அவருக்கு ஏன் உதவக்கூடாது என பலமுறை நாம் ஏங்கியதுண்டு.
அந்த ஏக்கத்தை போக்கியிருக்கின்றார் கண்ணியமிகு காயிதே மில்லத்தின் பேரர். ஏனெனில் இந்த விருது இரண்டரை இலட்ச ரூபாய் - ஐ உள்ளடக்கியது”………..
வெளிநாட்டு உதவிகள் அனுமதியை ரத்து செய்தால் என்ன? இந்நாட்டில் உள்ள பலகோடி பேர் தீஸ்தாவின் சட்ட நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். இந்த புனித ரமலானில் ஜகாத் மற்றும் சதகாவாகவும் உதவிடுவீர். அவர் ‘சப்ரங்’ அறக்கட்டளைக்கு அன்பளிப்பாகவும் உதவலாம். தீஸ்தாவின் தோல்வி இந்த நாட்டின் நீதி மற்றும் ஒருமைப்பாட்டின் தோல்வி. தீஸ்தாவின் வெற்றி மோடியுடன் அவர் அரசையும் தூக்கியெறியும்.
தீஸ்தா செதல்வாட் தொடர்புக்கு
teestateesta@gmail.com
teestateesta@gmail.com