வெள்ளி, 24 ஜூன், 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது பிரிட்டன்


ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று நடந்த பொது வாக்கெடுப்பில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து 52% மக்களும், அதில் நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து 48% மக்களும் வாக்களித்துள்ளனர். பொது வாக்கெடுப்பு முடிவுகளின் படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியானது. இக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் முதல் நாடானது பிரிட்டன். ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. அந்த நாடுகள் ஒரே கூட்டமைப்பாக செயல்படுகின்றன. யூரோ என்ற பொது கரன்சியையும் உறுப்பு நாடுகள் பயன்படுத்துகின்றன. உறுப்பு நாடுகளில் விசா இன்றி பயணம் செய்யவும் எந்த நாட்டிலும் தங்கிப் பணியாற்றவும் முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனும் உறுப்பு நாடாக உள்ளது. ஆனால் யூரோ கரன்சியை பிரிட்டன் ஏற்கவில்லை, தொடர்ந்து பவுண்ட் கரன்ஸியை மட்டுமே புழக்கத்தில் வைத்துள்ளது. மேலும் இதர ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் குடியேறுவதை பிரிட்டன் மக்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் டேவிட் கேமரூன் உட்பட பாதி பேர் ஒன்றியத்தில் நீடித்திருக்கவும் மீதி பேர் விலகவும் ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்க விரும்பம் தெரிவித்திருந்தனர்.