'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..
சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக் கொண்டுள்ளது. இப்போது அது குறித்து அவரே ஒரு விளக்கத்தையும் ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
அந்தப் பதிவைத் தான் உருவாக்கவில்லை என்றும், தனக்கு வந்த ஒரு செய்தியை, அதில் நியாயம் இருப்பதாகத் தானும் அந்த நேரத்தில் கருதியதால், பிறருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் தமிழ் எழுத்துகளே இல்லை என்றும், ஆங்கிலம்தான் உள்ளதென்றும் கூறியுள்ளார். (ஒருவேளை சமற்கிருத எழுத்துகளையும் வைத்திருக்கக்கலாம். தமிழ் எழுத்து இருக்க வாய்ப்பில்லைதான்.)
அவர் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் அவர் நேர்காணல் வெளியிட்டுள்ள பல சாதிய நஞ்சினை நம்மால் ஏற்க முடியவில்லை.
சுவாதியின் படுகொலையை யாரும் கண்டிக்கவில்லை என்பது எள்ளளவும் உண்மையில்லை. அனைவரும் கண்டித்தனர். அனைத்துக் கட்சியினரும் கண்டித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உட்படப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இது போன்ற தரங்கெட்ட பதிவுகளைப் பகிர்ந்ததன் மூலம் ஒய்.ஜி. மகேந்திரன் போன்றவர்கள்தான், சுவாதி கொலையைப் பற்றி நீண்டிருக்க வேண்டிய விவாதங்களைச் சாதி பற்றியதாக மாற்றிவிட்டனர்.
தனக்கு வரும் செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன், அந்தச் செய்தியின் தரம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டாமா? திராவிடப் பொறுக்கிகள், காம்ராட் கயவர்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிற அந்தப் பதிவை, மக்களால் அறியப்பெற்ற நீங்கள் பகிரலாமா? "தெருப்பொறுக்கி ஒய்.ஜி.மகேந்திரன்" என்று யாராவது எனக்கு ஒரு பதிவை அனுப்பினால், அதனை நான் கண்டிப்பேனே அல்லாமல், அதனை இன்னொருவருக்கு அனுப்ப மாட்டேன். அப்படி அனுப்பிவிட்டு, அது என்னுடையதில்லை என்று சொல்லும் கோழையாகவும் வாழமாட்டேன்.
தான் அதனை உருவாக்கி அனுப்பவில்லை என்றாலும், அந்தக் கருத்தில் அந்த நேரத்தில் தனக்கு உடன்பாடு இருந்தது என்று கூறுவதன் மூலம், தன் சாதி வெறியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆம், அது சாதி வெறிதானே அன்றிச் சமூக அக்கறை அன்று. சமூக அக்கறை உடையவராக மகேந்திரன் இருந்திருப்பாரரேயானால், யார் கொலை செய்யப்பட்டாலும் குமுறியிருப்பார், குரல் கொடுத்திருப்பார். தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுலராஜ், உடுமலைப்பேட்டை சங்கர் போன்றவர்கள் கொல்லப்பட்டபோது, எத்தனையோ செய்திகள் வலைத்தளங்களில் உலவினவே! அவற்றுள் எத்தனை செய்திகளை அவர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்? அவருடைய அம்மா நடத்தும் பள்ளியில் ஒரு சிறுவன் நீச்சல் குளத்த்தில் இறந்து போனானே, அவனுக்காக மகேந்திரன் தெருவுக்கு வந்து போராடினாரா?
போகட்டும், அவர்களெல்லாம் சூத்திரர்கள், தலித்துகள்! பார்ப்பன சாதியில் பிறந்த காஞ்சி சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது, எத்தனை பதிவுகளை மகேந்திரன் பகிர்ந்துள்ளார்? அந்த வழக்கில் குற்றம் சாற்றப்பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டபோது, கொந்தளித்தாரா மகேந்திரன்? உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதில் எந்தப் பார்ப்பனருக்காவது ஆர்வம் உண்டா?
ஒரு தொலைக்காட்சி, சங்கரராமன் கொலைவழக்கில் தீர்ப்பு வெளிவந்த நாளில், நடிகர் எஸ்.வி.சேகரிடம் பேட்டி கண்டது. "இது இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி" என்றார் அவர். அடுத்து என்னிடம் கேட்டார்கள், "அடடா, சங்கரராமன் ஒரு முஸ்லீம் என்று எனக்கு இதுவரை தெரியாமல் போய்விட்டதே" என்றேன் நான்.
சங்கர்ராமனைக் கொன்றவர்கள் மீதும் பார்ப்பனர்கள் கோபம் கொள்ளவில்லை. சங்கராச்சாரியைக் கைது செய்த ஜெயலலிதாவின் மீதும் அவர்கள் கோபம் கொள்ளவில்லை. சாதி வெறிக்கு இதனை விடச் சிறந்த சான்று வேறு என்ன இருக்க முடியும்?
இப்போதும் தமிழக அரசின் மீதோ, முதலமைச்சர் ஜெயலலிதா மீதோ அவர்கள் ஒரு சிறு கல்லையும் எடுத்து எறியவில்லை. அவரைப் பாதுகாப்பதில் அவ்வளவு கவனமாக உள்ளனர். இரண்டு மணி நேரம் அந்த உடலின் மீது ஒரு துணியைக் கூடப் போர்த்தாமல், அங்கேயே நின்ற காவல் துறை மீதும், அத்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் மீதும் இவர்களுக்கெல்லாம் எந்த வருத்தமும் இல்லை.
தொலைக்காட்சி நேர்காணலில், தன்னை அறியாமல் நடிகர் மகேந்திரன் வெளியில் வந்து விழுந்திருக்கும் இடம் ஒன்று உள்ளது. "ஒசந்த சாதி" என்பதால் யாரும் கவனிக்காமல் விட்டு விட்டார்களோ என்று தோன்றியதாகச் சொல்கிறார்.
நீங்கள் "ஒசந்த சாதி" என்றால் நாங்களெல்லாம் யார் மகேந்திரன்? சுவாதியைக் கொன்றவர்களை மட்டுமில்லை, உங்களைப் போன்ற சாதி வெறியர்களையும் கைது செய்ய வேண்டாமா?