திங்கள், 27 ஜூன், 2016

அட்டைப் பெட்டி தயாரிப்பு, பணம் கொட்டும் தொழில்.!


பேக்கிங் செய்யவேண்டிய பொருட்களைக் கையாள்வதில் அட்டைப் பெட்டிகள் அவசியமாகிவிட்டன. பெரிய பெரிய பண்டல்கள் முதல் சின்னக் கண்ணாடி பொருட்கள் வரை பாதுகாப்பாக அனுப்பிவைக்க அட்டைப் பெட்டிகள்தான் சரியான தீர்வாக இருக்கிறது.
உணவுப்பொருட்கள், சோப்பு முதற்கொண்டு எல்லாமே அட்டைப் பெட்டிகளின் ஆதிக்கம்தான். பொதுவான அளவுகளில் செய்து விற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஆர்டர்களுக்கேற்ப வேலைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். எனவே, வணிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம்கொண்ட அட்டைப் பெட்டிகள் தயாரிப்பதும் லாபம் மிகுந்த தொழிலே. தவிர, இந்த அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தியபின் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதும், விலை குறைவானது மற்றும் எளிதாக கையாளுவதற்கு ஏற்ப குறைந்த எடை என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப ஆர்டர்களை எளிதில் பிடித்துவிட முடியும். எனவே, இந்த வாரம் இதுகுறித்துப் பார்ப்போம்.
மேல்பக்கமும், கீழ்பக்கமுமாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள், இடையில் ஓர் அச்சின் மூலம் வளைவு வளைவாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள். இந்தப் பேப்பர்களைப் பசை மூலம் ஒட்டவைத்து, அதன் முன்புறமும் பின்புறமும் இணைக்கப்படும். இந்தத் தொழில் இயந்திரமயமாக்கப்பட்ட தொழில். சரியாகச் செய்தால் லாபம் நிச்சயம்.
திட்ட மதிப்பீடு!
நிலம் : சொந்தமாக அல்லது வாடகை
இயந்திர வகை
(ஐந்து அடுக்கு பெட்டிக்கு) : ரூ.25 லட்சம்
மின்சாரம் மற்றும் இதர
செலவு : ரூ.5 லட்சம்.
நடைமுறை மூலதனம் : ரூ.7.50 லட்சம்.
இந்தத் திட்டத்துக்கு ‘நீட்ஸ்’ திட்டத்தின் மூலம் மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பட்டப் படிப்பு அல்லது பட்டயப் பயிற்சி மற்றும் ஐ.டி.ஐ. பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். வயது 45-க்குள் இருந்தால் ‘நீட்ஸ்’ திட்டத்தில் கடனுதவி கிடைக்கும்.
மூலதனம்!
நமது பங்கு (5%) : ரூ.1,50,000
மானியம் : ரூ.7,50,000
வங்கிக் கடன் : ரூ.21,00,000
உற்பத்தி!
ஐந்து அடுக்கு (ஃப்ளே) அட்டைப் பெட்டிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். 500 கிராம் எடை கொண்ட பெட்டிகள் எனில், ஒருநாளில் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும். நாம் சராசரியாக 5,000 பெட்டிகள் உற்பத்தி செய்வதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி கணக்கிட்டால் மாதத்துக்கு 62.5 டன் உற்பத்தி செய்ய முடியும். நாம் இதை 60 டன் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு டன் பேப்பர் விலை ரூ.26,000 – ரூ.27,000 வரை ஆகும். நாம் ரூ.27,000 என்று வைத்துக்கொள்வோம்.
பேப்பர்களின் இடையில் ஒட்டுவதற்கான பசை தேவைப்படும். இது பவுடராகக் கிடைக்கும். தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 60 கிலோ பசைமாவில் 300 கிலோ பசை கிடைக்கும். 1 டன் உற்பத்திக்கு 60 கிலோ பசை தேவை. இந்தப் பசை மாவு ஒரு கிலோ 35 ரூபாய். மாதத்துக்கு 60 டன் உற்பத்தி இலக்கு என்கிறபோது ரூ.1,26,000 தேவைப்படும் (60ஜ்60ஜ்35=1,26,000).
வேலையாட்கள்! (ரூ.)
மேலாளர்: 1X15,000 = 15,000
மேற்பார்வையாளர்: 2X10,000 = 20,000
ஆபரேட்டர்கள்: 10X8,000 = 80,000
துணை வேலையாட்கள்: 3X5,000= 15,000
விற்பனையாளர்கள்: 1X10,000 = 10,000
மொத்தம் = 1,40,000
மின்சாரம்: 65 ஹெச்.பி : 35,000
மூலப்பொருள்:
காகிதம் 1 டன் : ரூ27,000. ஒரு மாதத்துக்கான உற்பத்தி இலக்கு 60 டன் எனில் ரூ.16,20,000 செலவாகும்.
(60X27,000=16,20,000)
விற்பனை வரவு!
ஒரு கிலோ ரூ.38 – 40 வரை விற்பனை செய்யலாம். நாம் ரூ.38-க்கு விற்பனை செய்கிறோம் எனக் கொண்டால் ஒரு மாத விற்பனை வரவு ரூ.22,80,000
மொத்த செலவு! (ரூ)
மூலப்பொருட்கள் : 16,20,000
பசை : 1,26,000
வேலையாட்கள் : 1,40,000
மின்சாரம் : 35,000
கடன் வட்டி (12.5%) : 21,875
கடன் தவணை
(60 மாதங்கள்) : 35,000
நடைமுறை மூலதன வட்டி: 7,800
இயந்திரப் பராமரிப்பு : 10,000
மேலாண்மைச் செலவு : 10,000
விற்பனைச் செலவு : 10,000
தேய்மானம் : 38,000
_________
மொத்த செலவு : 20,53,675
_________
மொத்த வரவு : 22,80,000
மொத்த செலவு : 20,53,675
_____________
லாபம் : 2,26,325
_____________