செவ்வாய், 28 ஜூன், 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது இங்கிலாந்து : ஒரு முழுமையான அலசல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது இங்கிலாந்து : ஒரு முழுமையான அலசல்


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியுள்ள சூழலில், அதன் சாதக பாதகங்கள் மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றை சுருக்கமாக காண்போம்...

இரண்டாம் உலகப்போர் உலகிற்கு பல பாடங்களை கற்றுத்தந்தது. அதில் முக்கியமானது இனவாதத்திற்கு எதிராக மக்கள் ஒரணியில் 'ஒரே குலம்' என்பதாய் சேர வேண்டும் என்பது. யூத இனத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் வேறு சில சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவும் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. ஆரிய இனமே உயர்ந்தது என்ற கருத்தியல் கட்டமைக்கப்பட்டு, பல லட்சம் யூதர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வதை முகாம்களில் கொன்று குவிக்கப்பட்டனர். ஏராளமானோர் எலிகளை போல் சோதனை சாலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

போர்களுக்கு எதிராகவும், இனவாதத்திற்கு எதிராகவும் மனிதத்தை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை நிறுவுவதற்காக என்றுக் கூறி ஐக்கிய நாடுகள் சபை 2ம் உலகப்போரின் முடிவில் 1945இல் உருவாக்கப்பட்டது. இதனிடையே, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளை அச்சுறுத்தி வந்த 'கம்யூனிச பூத'த்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கம்யூனிச கிழக்கு ஜெர்மனிக்கு எதிராக, முதலாளித்துவ மேற்கு ஜெர்மனியை வலுப்படுத்த 1948 மார்ச்சில் பெல்ஜியம், பிரான்ஸ், லக்ஸம்பர்க், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பிரெசல்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கத்தின் அஸ்திவாரம்:

இதனை தொடர்ந்து, பனிப்போர் காலக்கட்டத்தில் ஐரோப்பிய சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் 1951இல் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு கூட்டமைப்பு, பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், லக்ஸ்சம்பெர்க் உள்ளிட்ட 6 நாடுகள் இடையேயான 1957 ரோம் ஒப்பந்தமுமே ஐரோப்பிய யூனியனின் தொடக்க புள்ளியாக அமைந்தது. இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் அடுத்தடுத்து அவ்வமைப்பில் உறுப்பினராக தொடங்கின.

எவ்வாறு இருப்பினும் நவீன உலகில் நேரடியாக காலனிகளை உருவாக்க முடியாத சூழலில், தொழிற்துறை வளர்ச்சியடைந்த ஐரோப்பிய தேசங்களில் ஒற்றை சந்தையை மையப்படுத்தியே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக கருதலாம். ரஷ்யாவில் ஏற்பட்டது போன்ற கம்யூனிச புரட்சி பிற ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுவிடாத வண்ணம் வலுவான கூட்டமைப்பு உருவாக்கப்படுவதன் தேவை முதலாளித்துவ அரசுகளுக்கு நிலவியது. மேலும், பல்வேறு நாடுகள் இடையே பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள தடைகளை உடைத்தெறிவதன் மூலம், கட்டற்ற சுதந்திரத்தை சந்தைக்கும், முதலீட்டிற்கும் அது அனுமதி அளித்தது. 1985இல் கையெழுத்தான செஞ்சென் ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவற்றின் இடையே பாஸ்போர்ட் முறையும் ஒழிக்கப்பட்டது. உறுப்பு நாடுகளிடையே பொதுவான வணிக கொள்கை, மீன்பிடி கொள்கை உள்ளிட்டவைகளுடன், கூட்டமைப்பில் உள்ள 12 நாடுகள் ஏற்றுக் கொண்ட யூரோ என்ற பொதுவான நாணய முறையும் 2002ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

1992இல் கையெழுத்தான மாஸ்டிரிச் ஒப்பந்தத்தை தொடர்ந்து  ஐரோப்பிய யூனியன்  முறைப்படி உதயமானது. மொத்த உள்நாட்டு பற்றாக்குறையை 3 விழுக்காட்டிற்கு குறைவாக வைத்துக் கொள்வது, அரசு கடனை 60% என்ற அளவுக்குள் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளுடனேயே கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 28 உறுப்பு நாடுகளுடன், 50 கோடி மக்களை கொண்டுள்ள ஐரோப்பிய யூனியன், உலகின் மொத்த உற்பத்தியில் 30 விழுக்காட்டை தன் வசம் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்டவையும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்காக உருவாக்கப்பட்டு பேணப்பட்டு வருகிறது.

1973இல் டென்மார்க் உள்ளிட்ட அண்டை நாடுகள் கூட்டமைப்பில் இணைந்ததை அடுத்து, அதில் இணைய நார்வே அரசு விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்காக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பாலான மக்கள் எதிராக வாக்களித்ததால் ஐரோப்பிய ஒன்றியத்தில் நார்வே இணையவில்லை. 2004இல் ஹங்கேரி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட 11 நாடுகள் ஐரோப்பிய யூனியனில் இணைந்து அதற்கு பலம் சேர்த்தன. உலக அமைதிக்கான பங்களிப்பிற்காக ஐரோப்பிய யூனியனுக்கு 2012ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

பிரச்சனையின் தொடக்கம்:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையேயான எல்லைகள் திறந்துவிடப்பட்டதால் பல்வேறு நாடுகளிலும் இருந்து பலரும் இங்கிலாந்தில் குடியேறியதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக அந்நாட்டினர் கருத தொடங்கினர். வேலை வாய்ப்பு உள்ளிட்டவை தங்களிடம் இருந்து பறிக்கப்படுவதாக அவர்கள் கருதினர். குறிப்பாக, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற அந்நாட்டில் கோரிக்கைகள் வலுத்தன. இதற்கு ஆளும் கண்சர்வேடிவ் கட்சியிலும் ஆதரவு குரல்கள் எழுந்ததை தொடர்ந்து, பொதுவாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு கோரிக்கை:

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்தின் முடிவு அதனுடன் வலுவான பொருளாதார உறவு கொண்டுள்ள பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனது முடிவை இங்கிலாந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாடுகள் இங்கிலாந்தை அறிவுறுத்தின. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் இங்கிலாந்து பிரதமர் இங்கிலாந்தை கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களது கருத்தையே இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மக்களிடம் பிரதிபலித்தார். இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும்முடிவு இங்கிலாந்து பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகினால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் இத்தகைய முடிவுக்கு எதிராக இங்கிலாந்து தொழில் நிறுவனங்களும் கருத்து தெரிவித்திருந்தன. தங்களது தொழிலாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வாக்களிக்குமாறு தொழில் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன.

இதனிடையே, இங்கிலாந்தின் முடிவு சர்வதேச பொருளாதாரத்தையும், ஐரோப்பிய யூனியனையும் பாதிக்கும் என்பதால் அதிலிருந்து வெளியேற வேண்டாம் என இங்கிலாந்தை ஐரோப்பிய யூனியன் கேட்டுக் கொண்டது. பிரசல்ஸ்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இங்கிலாந்திற்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், இங்கிலாந்து அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில் இருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட சலுகைகளை இங்கிலாந்து பெற வழிவகை ஏற்பட்டது. இதனை சாதகமான அம்சமாக பிரச்சாரம் செய்யப் போவதாக டேவிட் கேமரூன் அறிவித்திருந்தார்.

பொதுவாக்கெடுப்பும் அதன் முடிவும்:

இதனை அடுத்து, ஐரோப்பிய யூனியனிலேயே இணைந்திருக்க வாக்களிக்குமாறு டேவிட் கேமரூன் கேட்டுக் கொண்ட போதிலும், பெரும்பாலானோர் கூட்டமைப்பில் இருந்து வெளியேற ஆதரவளித்து வாக்களித்துள்ளனர். 4 கோடியே 65 லட்சம் பேர் அளித்த வாக்குகள் 382 மையங்களில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 52 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என்பதாகவே உள்ளது.



ஐரோப்பிய யூனியனும் அதனை தொடர்ந்த உரையாடல்களும்:

ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதால் அகதிகள் நலனுக்கு செலவிடும் தொகை உட்பட இந்திய மதிப்பில் சுமார் 1.30 லட்சம் கோடி ரூபாய்களை இங்கிலாந்து சேமிக்க முடியும் என்பதுடன், ஐரோப்பிய யூனியனின் சட்டங்களுக்கு உட்பட்டுள்ளதால் இழந்த வர்த்தக ஒப்பந்தங்களை புதிதாக உருவாக்க இயலும். இதன் மூலம், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும், ஊதிய உயர்வும் கிடைக்கும். அனைத்திற்கும் மேலாக, எல்லையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், பிரிட்டனுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை தடுக்க முடியும் இத்தகைய வாதங்களே வாக்கெடுப்பில் தனித்து செல்லும் தீர்மானம் வெற்றி பெற காரணமாக அமைந்தன.

ஐரோப்பிய யூனியனுக்கு எதிரான உரையாடலின் முக்கிய மையப்பொருளே, இங்கிலாந்தில் குடிபெயரும் அகதிகள் சார்ந்ததாகவே உள்ளது. இலங்கை, சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயரும் அகதிகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடிபெயர சொல்லிக் கொள்ளும் படியான தடைகள் இல்லாமல் இருந்தது. அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இந்த முடிவு ஈழத்தமிழர்களை நிச்சயம் பாதிக்கும் என்ற பார்வை முன் வைக்கப்படுகிறது. 'வேலை வாய்ப்புகளை மீட்பதற்காக' என்று கூறி ஐரோப்பிய யூனியனை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட உள்ள நுழைவு கட்டுப்பாடு உள்ளிட்டவை பிறரை பொருத்தவரை மேலும் இறுகும் வாய்ப்புகள் உள்ளதால், இங்கிலாந்தில் புலம் பெயர்ந்து வாழும் பிறருக்கு எதிர்காலங்களில் பல சிக்கல்கள் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மிகக்குறைந்த ஊதியத்திற்கே பணியாற்றி வரும் சூழலில் அவர்களாலேயே தங்களது வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாக கட்டமைக்கப்படும் வாதங்கள், சொந்த தேசத்தில் வாழ வழியற்று இங்கிலாந்தில் குடிபெயர்ந்து அவல நிலையில் உழலும் அகதிகளை அதிகமாகவே பாதிக்கக்கூடும்.