திங்கள், 27 ஜூன், 2016

‪#‎முஸ்லிம்கள்‬ ‪#‎அடைய‬ ‪#‎வேண்டியவை‬ ‪#‎அரசுப்‬ ‪#‎பணிகளே‬ !


கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்துறை ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றத்தைப் பெறும் சமுதாயமே மேம்பாடுடைய சமுதாயமாகக் கருதப்படும். இம்மூன்று துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுதப்படிக்கத் தெரிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி எழுதப் படிக்கத் தெரிந்த முஸ்லிம் ஆண்கள் 67.6 சதவிகிதம், பெண்கள் 50.1 சதவிகிதம் ஆகும். இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சராசரியாக 74 சதவிகிதம் பேர் ஆவர். ஆனால் முஸ்லிம்களில் ஏறக்குறைய பாதிப்பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். ஆரம்பக் கல்விக்கும் கீழாகப் படித்தவர்களில் ஆண்கள் 20.9 சதவிகிதம், பெண்கள் 19.8 சதவிகிதம், ஆரம்பக்கல்வி அளவில் படித்தவர்கள் ஆண்கள் 16.3 சதவிகிதம், பெண்கள் 13.9 சதவிகிதம், எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆண்கள் 10 சதவிகிதம், பெண்கள் 7.8 சதவிகிதம், உயர்நிலைப்பள்ளி முடிய படித்தவர்கள் ஆண்கள் 8 சதவிகிதம், பெண்கள் 6.2 சதவிகிதம் பட்டப்படிப்பு மற்றும் அதற்குமேல் படித்தவர்கள் ஆண்கள் 2.3 சதவிகிதம், பெண்கள் 1.6 சதவிகிதம் பேர் ஆவர். எனவே முஸ்லிம்கள் கல்வி பயில்வதில் மேலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அரசு புள்ளி விவரப்படி 16 விழுக்காடு ஆகும். ஆனால் 20 முதல் 22 விழுக்காடு முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு புள்ளி விவரப்படி 6 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் 10 முதல் 13 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளதாகச் சில தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் 16 விழுக்காடு முஸ்லிம்கள் அரசு புள்ளி விவரப்படி வசித்து வந்தபோதிலும் மத்திய அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருப்பது கவனிக்கத்தக்கதாகும். தமிழக அரசிலும் முஸ்லிம்களின் நிலை அதுவே ஆகும்.
உலக அளவில் 3 விழுக்காடு உள்ள யூதர்கள் அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே தங்கள் ஆதிக்கத்தின்கீழ் வைத்துள்ளமைக்குக் காரணம் அவர்களது கல்வியறிவும், உயர் பதவிகளில் வீற்றிருப்பதும், பொருளாதாரத் துறைகளைக் கைப்பற்றியிருப்பதுமே ஆகும். இந்திய விடுதலைக்கு முன்பும் சரி விடுதலைக்குப் பின்பும் சரி இந்திய ஆட்சி அதிகாரத்தில் உயர்பதவிகளில் பணியாற்றுபவர்கள் குறிப்பிட்ட சகோதர மேலாதிக்கக்காரர்கள்தாம் என்பது கண்கூடாகும். ஏறக்குறைய 3 விழுக்காடு உள்ள அவர்கள்தாம் அரசு அதிகாரத்தில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள் என்பது சிந்திக்கத் தக்கதாகும். அத்தகையோர் தங்கள் அறிவின் காரணமாக இன்று அரசு அதிகாரத்தில் மட்டுமல்ல அரசியல் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். எனவே தனி இட ஒதுக்கீடு, எண்ணிக்கை விழுக்காடு இவற்றைப் பற்றி மட்டுமே புலம்பிக் கொண்டிருக்காமல் முஸ்லிம் சமுதாயம் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் வழிமுறைகளில் மிக மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இன்றைய சூழலில் அரசியல் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம்கள் கைப்பற்றுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். அரசியலில் சரியான அணியைத் தேர்வு செய்து அந்த அணியில் பலமிக்கவர்களாகத் தங்களை ஆக்கிக்கொண்டு செயல்பட இன்றைய தினம் இயலுமே தவிர முழுமையான ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்து சேர வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாகத் தற்போதைய நடப்பில் நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவே நாம் பெரிதும் போராட வேண்டியிருக்கிறது. சாதி, சமயச்சார்பற்ற, மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு இந்தியா என்பதை நிலைநிறுத்தப் பாடுபட வேண்டிய காலக்கட்டம் உருவாகியிருக்கிறது.
தற்போதைய இந்தியச் சூழலில் அரசு நிர்வாக அதிகாரத்தில் அமரும் வகையில் உயர்பதவிகளில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பணியாற்ற முனைப்புக் காட்டிட வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதைக் காட்டிலும் அரசு நிர்வாக அதிகாரத்தில் உயர்பதவிகளில் அமர்வதிலேயே முஸ்லிம் இளைஞர்கள் தங்களது முழுக்கவனத்தையும் செலுத்திட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உயர்பதவிகளில் அமர்வதன் மூலமே முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டு வரும் இடர்ப்பாடுகளைக் களைய முடியும்; சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லவும் முடியும்.
படிப்பு முடிந்ததும் அயல்நாடுகளில் பணியாற்றப் பறப்பதிலேயே முஸ்லிம் சமுதாயத்தினரில் பெரும்பான்மையினர் விரும்புகின்றார்கள். வெளிநாடுகளில் தற்சமயம் நிலவிவரும் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனிக்கும்போது வரவர வேலைவாய்ப்புகள் மிகுதியாகக் குறைந்து கொண்டு வருவதையே உணர முடிகிறது. மேலும் முன்புபோல் அல்லாமல் இப்போது பொதுவாக இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. வெளிநாட்டுப் பணிகளில் தற்போது பணிப்பாதுகாப்பும் மிகவும் குறைந்து விட்டது.
இந்தியாவில் தனியார் நிறுவனத்துறைகளிலும் பணிப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிப்பாதுகாப்பு என்பதே இல்லை. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து வருகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன; பணிப் பாதுகாப்பும் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது; பணிப் பளுவும் அதிகமாகி மன இறுக்க நோய், இருதய நோய் ஏற்படுமளவிற்கு நிலைமை சிக்கலாகி விட்டது. ஆக, தனிநபர் கணக்கிலும், சமுதாயக் கணக்கிலும் அயலகப் பணிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனப் பணிகளும் ஒரு பதட்டமான காலக் கட்டத்திலேயே இருந்து வருகின்றன.
இதற்கு மாறாக அரசுப் பணிகள் வழக்கம்போல் குறையாமலேயே இருந்து வருகின்றன. பணிப் பாதுகாப்புமுண்டு; பெரிய அளவில் பணிச்சுமையும் கிடையாது; அடுத்த சில ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன. எனவே முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளை நோக்கித் தங்களது இலட்சியப் பயணத்தைத் தொடங்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., போன்ற உயர்பதவிகளுக்கான தேர்வுகளுக்கு முஸ்லிம் பட்டதாரிகள் தயாராக வேண்டும். இந்தத் தேர்வுகளுக்குப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., என்பது அடைய முடியாதது அல்ல; அர்ப்பணிப்பு உணர்வும், விடாமுயற்சியும், தகுந்த பயிற்சியுமிருந்தால் இறையருளால் ஐ.ஏ.எஸ்., என்பது அடையக்கூடியதே ஆகும்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி தகுதி (ரேங்க்) அடிப்படையில் ஐ.ஏ.எஸ். கிடைக்காவிட்டாலும் Indian Foreign Service, Indian Forest Service, Indian P&T Accounts & Finance Service, Indian Audit & Accounts Service, IRS (Customs & Excise), Indian Defence Accounts Service, Indian Revenue Service, Indian Postal Service, Indian Railway Personnel Service, Indian Railway Traffic Service, Indian Defence Estate Service, Indian Information Service, Indian Trade Service, Indian Corporate Law Service, Indian Civil Accounts Service மற்றும் குரூப் ஏ-இல் உள்ள 49 துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெறமுடியும்.
அது மட்டுமின்றி Armed Forces HQs Civil Service, Delhi, Andaman-Nicobar Islands Etc. Civil Services, Daman-Diu etc. Police Service, Pondicherry Civil Service, Pondicherry Police Service மற்றும் குரூப் பி-இல் உள்ள ஏறக்குறைய 25 துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறமுடியும்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் பெறுகிற பயிற்சி டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் ஒன், குரூப் டூ, தேர்வுகளை எளிதாக எழுதி வெல்ல உதவும். தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் ஒன் மற்றும் குரூப் டூ தேர்வுகளின் மூலமாக Deputy Collector, Deputy Superintendent Of Assistant Commissioner, Deputy Commercial Tax Officer, Sub Register, Assistant Director Of Rural Development, Chief Education Officer, District Education Officer, Assistant Commercial Tax Officer உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பணியிடங்களைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உணர்ச்சிகளின் அடிப்படையில் அரசியல் அதிகாரம் பெறமுயல்வதைவிட அறிவின் அடிப்படையில் அரசு நிர்வாக அதிகாரப் பணிகளில் அமர முனைவதே வீடும் நாடும் நமது சமுதாயமும் மேம்படுவதற்கான சிறந்த வழியாகும்.
சமுதாயம் கண்டுவரும் இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் உரிய வகையில் களையவும், சமுதாயம் முன்னேற்றப் பாதையில் தொய்வின்றிச் செயல்படவும் மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெறுதல் அவசியத்திலும் அவசியமாகும். இதனை உணர்ந்து செயல்பட முஸ்லிம் பட்டதாரி இளைஞர்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி:சேமுமு- Semumu Mohamadali
நன்றி:( இனிய திசைகள் – ஏப்ரல் 2015 இதழிலிருந்து )