விமானப் பயணங்களின்போது வழக்கமாக பின்பற்றப்படும் இரண்டு நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் உடமைகள், விமான நிலையத்தில், பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பயணிக்கும் போது சுமார் 7 கிலோ வரையிலான எடை கொண்ட லக்கேஜை உடன் எடுத்து செல்ல முடியும். அதற்கு மேலான எடை கொண்ட பொருட்களை தனியாக கார்கோவில் மட்டுமே எடுத்து செல்ல முடியும். அவ்வாறு கையில் எடுத்து செல்லக்கூடிய கைப்பை மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனரில் பரிசோதிக்கப்பட்டு அதன் அடையாளமாக கைப்பையில் டேக் பொருத்தும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையை கைவிட மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று மின்னணு முறையிலான போர்டிங் பாஸ் என்று அழைக்கப்படும் பயண அனுமதி சீட்டுக்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி மின்னணு பயண அனுமதி சீட்டு, பயணிகளின் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். விமான நிலையத்தில் பயணிகள் மொபைல் போனில் வந்துள்ள மின்னணு பயண அனுமதி சீட்டை காட்டினால் மட்டும் போதும்.
விமான நிலைய அதிகாரிகள் அதனை ஸ்கேன் செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த இரு புதிய வசதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் ஓரிரு மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
பதிவு செய்த நாள் : December 09, 2016 - 07:23 AM