சனி, 24 டிசம்பர், 2016

கேஷ்லெஸ் இந்தியா... மறைக்கப்படும் உண்மைகள்!

கேஷ்லெஸ்
ஏடிஎம்-களில் தேவைப்படும் பொழுதெல்லாம் பணம் எடுப்பது இனி சாத்தியமற்றதா? பேசாமல் பேடிஎம் போன்ற மொபைல் செயலிகளுக்கு மாறி விடலாமா? என்ற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. மோடியும் கேஷ்லெஸ் எகானமி என்பதை வலியுறுத்தி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக நமக்கு கிடைத்துள்ள அனுபவம் அப்படி. பிரதமர் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த அடுத்த நாளே, இதற்காகவே காத்திருந்தது போல பேடிஎம் குறித்த விளம்பரம் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பெரும்பாலான நாளிதழ்களில் இடம் பெற்றிருந்தது. சரி, பேடிஎம் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்ளும் முன்பாக, அந்த நிறுவனத்தின் பின்னணி குறித்தும், அதைப் பயன்படுத்துவதில் இருக்கக் கூடிய ஆபத்துகளைப் பற்றியும் நாம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள நினைப்பது நியாயம் தானே? 
எது எப்படி இருந்தாலும், வேறு வழியின்றி பலர் கேஷ்லெஸ் பேடிஎம்-மை பயன்படுத்தத் தொடங்கியதை, அந்த நிறுவனத்தின் திடீர் வளர்ச்சி மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. பிரதமரின் நவம்பர் 8 ஆம் தேதி அறிவிப்புக்குப் பிறகு, பேடிஎம் நிறுவனத்தின் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெறுவது பலமடங்காக அதிகரித்து விட்டது என்கிறார் அந்த நிறுவனத்தில் துணைத் தலைவர் சுதான்ஷு குப்தா. ஒவ்வொரு நாளும் சுமார், 70 லட்சம் புதிய பரிமாற்றங்களின் மூலம், 120 கோடி ரூபாயை பேடிஎம்  மூலமாக மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், நான்கு மாதங்களுக்குப் பிறகு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இலக்கு ஒரு சில நாட்களிலேயே எட்டப்பட்டு விட்டது என்றும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் அவர். 
பேடிஎம்  - சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு இந்திய நிறுவனம் தான் என்கிறார் அதன் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா… மாருதியைப் போலவே, பேடிஎம் கூட ஒரு இந்திய நிறுவனம் என்று அவர் சாதித்தாலும், சமீப காலமாக நடைபெற்றுள்ள ஒரு சில மாற்றங்கள் நம் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. 
2010 ஆம் ஆண்டில் மொபைல் ரீ சார்ஜ் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் இன்றைக்கு பெரும்பான்மை இந்தியர்களின் பணத்தை கையாளும் திறன் கொண்டதாக எப்படி மாறியது? அதன் நம்பகத்தன்மை என்ன? பிரதமரே இது போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்யப் பரிந்துரைக்கும் பின்னணி என்ன? 
2015 ஆம் ஆண்டு மார்ச் மாத்தில், தொழிலதிபர் ரத்தன் டாடா பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். அதே மாதத்தில் அலிபாபா மற்றும் அதன் துணை அமைப்பான ஆன்ட் ஃபினான்சியல்(Ant Financial) ஆகிய நிறுவனங்கள் 700 மில்லியன் டாலர் அளவுக்கு இந்த நிறுனத்தில் தன் முதலீட்டைக் கொண்டு வந்து குவிக்கிறன. இ-காமர்ஸ் எனப்படும் இணைய வணிகத்தில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் அலிபாபா சாட்சாத் ஒரு சீன நிறுவனம். பேடிஎம் நிறுவனத்தின் அங்கமாக இருக்கும் ஒன்டிஎம் நிறுவனத்தின் பங்குகள் சீன நிறுவனத்தின் வசம் இருப்பதால், பேடிஎம் ஒரு சீன நிறுவனம் என்ற குரல் பரவலாக ஒலிக்கிறது. 
இதற்குப் பிறகு, 2016 மார்ச் மாதத்தில், தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்துடன் ஐசிஐசிஐ வங்கியிடம் 300 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறது பேடிஎம் நிறுவனம். 
2010 ஆம் ஆண்டு  நிறுவனத்தைத் தொடங்கிய போது, இந்த அளவு பிரம்மாண்ட வளர்ச்சியை அவர்களே எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். பேடிஎம் நிறுவனத்தில் ரத்தன் டாட்டா முதலீடு செய்வதும், பின்னர் ஒரு சீன நிறுவனம் மிகப் பெரிய அளவில் பணத்தைக் கொட்டுவதும், இந்தியாவில் ஆன் லைன் மூலமாகத்தான் இனி பணப்பரிமாற்றம் நடைபெறும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்பதும் எந்தப் புள்ளியில் ஒருங்கிணைகிறது? சரி, இது தற்செயலாக நடைபெற்ற ஒரு மாற்றமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஒரு சீன நிறுவனத்தின் மூலமாகவா நீங்கள் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும்? என்ற கேள்வியை சிலர் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர், நமக்கு நன்கு பரிச்சயமான இந்திய கார்ப்பரேட்டுகள் கை ஓங்கும் வாய்ப்பு இருக்கிறது.
இனி ஆன்லைன் மூலமாக நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் மூலம் மிகப்பெரிய லாபம் ஈட்டலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால், லாபம் யாருக்கு என்பதுதான் கேள்வியே. பேடிஎம் நிறுவனத்தில் சமீப காலத்தில் நடைபெற்ற மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மாற்றங்களும், பேமெண்ட் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருப்பதும் பொதுமக்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. 
இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கியாக பேடிஎம் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது. கூடவே, ரிலையன்ஸ் நிறுவனம், பாரதி ஏர்டெல், வோட ஃபோன் என 11 பெரிய நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று வரிசை கட்டி நிற்கின்றன. நம்முடைய பணத்தை கணிசமாக இந்த நிறுவனக் கணக்குகளில் வங்கி மூலமாக பரிமாற்றம் செய்து விட்டால் போதும். நாம் நேரடியாக பணத்தை கையாளாமல், ஆன் லைன் மூலமாக பணம் செலுத்த வேண்டிய தருணங்களில் செலுத்திக் கொள்ளலாம். அதற்கான கமிஷன் தொகை லாபமாக அவர்களிடம் குவிந்து கொண்டே இருக்கப் போகிறது. மொத்தமாக நமது பணத்தையெல்லாம் கார்ப்பரேட் முதலைகளின் வாயில் வைத்துவிட்டு, எட்டி நின்று கெஞ்சிக் கொண்டிருப்பதே ஆகக் கடைசியில் இந்தியர்களுக்கு கிடைத்த பலன் என்றுதானே தோன்றுகிறது?
இல்லை…. பிரதமர் மோடி நினைத்திருந்தால், அரசாங்கமும், மக்களும் பயன் பெறும் வகையில் இதை மாற்றியிருக்க முடியும். 
ஆம்.. நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. பேமெண்ட் வங்கியாக அங்கீகாரம் பெற்ற 11 அமைப்புகளில் நமது அஞ்சல் துறையும் இருக்கிறது என்பதுதான் அது. 6 லட்சம் இந்திய கிராமங்களில், சுமார் 1 லட்சத்து 54 ஆயிரம் அஞ்சலகங்களுடன் வலுவான கட்டமைப்பைப் பெற்றிருக்கும் அஞ்சல் துறையும், இதே பணியை மேற்கொள்ள அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
2015 – 16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது, நிதியமைச்சர் அருண் ஜேட்லீ இது பற்றி குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் இதற்காக ஒரு குழுவை அமைக்கப்பட்டு, அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் அனைத்து சேவைகளையும், கிராமப்புற மக்களும் பெறும் வகையில், அஞ்சல் நிலையங்கள், “போஸ்ட் பேங்க் ஆஃப் இந்தியா” வாக செயல்படச் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வங்கி, காப்பீடு மற்றும் இணைய வணிகம் என அனைத்தையும் கையாளும் விதத்தில் அஞ்சல் துறை மேம்படுத்தப்பட்டால், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
அஞ்சல் நிலைய ஊழியர்கள் மட்டுமல்லாமல், முகவர்களையும் பயன்படுத்தினால், பணமற்ற பரிவர்த்தனை என்ற பிரதமரின் எதிர்பார்ப்பு குக்கிராமங்களையம் சென்றடையும். உண்மையிலேயே ஒரு பொருளாதார புரட்சியை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்பினால், இதை நமது பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும். POS எனப்படும் பாயின்ட் ஆஃப் சேல் கருவிகளை மகளிருக்கு வழங்கி, அவர்களை பிரதிநிதிகளாக நியமிப்பதன் மூலம் மக்களின் நம்பகத்தன்மையையும் பெறமுடியும், திட்டமும் மிகப்பெரிய வெற்றியடையும். பேடிஎம் போன்ற நிறுவனங்களிடம் குவியும் கமிஷன் தொகை, இந்திய மகளிருக்கு பரவலாக்கப்படுவதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
யாரோ ஒரு சில கார்ப்பரேட்டுகளிடம் நமது பணத்தை கொடுத்து வைப்பதற்கும், நமது நம்பிக்கைக்கு உரிய அஞ்சல் நிலையங்களில் போட்டு வைத்து, நன்கு அறிமுகமானவர்கள் மூலம் அதைப் பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, பேடிஎம் என தனியார் நிறுவன சேவைகளைப் பயன்படுத்தும்படி நம்மைக் கேட்டுக் கொள்ளும் பிரதமருக்குப் புரியுமா? 
- ஜெனிபர் வில்சன்
ஓவியம் : அ.நன்மாறன்
http://www.vikatan.com/news/india/75839-hidden-truth-behind-the-cashless-india.art