ஒரே கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்கள் குவித்து வரலாறு படைத்த பிரனாவ் தானவாடேவின் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது மும்பை போலீஸ்.
மும்பையை அடுத்த கல்யாணில் கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) கே.சி.காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரனவ் தனவாடே 1,009 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 116 ஆண்டு கால சாதனையை தகர்த்து எறிந்து வரலாறு படைத்தார் பிரனவ். அபார சாதனை காரணமாக ஒரே நாளில் உலகம் முழுக்க பாப்புலராகி விட்ட பிரனவுக்கு சச்சினே தனது கையொப்பமிட்ட, கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கி பாராட்டியுள்ளார். அந்த பிரனவ் தானவாடேவை கைது செய்து மும்பை போலீஸ் அவமானப்படுத்தியுள்ளது.
மும்பை கல்யாண் பகுதியில் உள்ள சுபாஷ் மைதானத்தில்தான் கடந்த 12 ஆண்டுகளாக பிரனவ் தானவாடே கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். பிரனாவ் தானவாடே மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நேற்று அந்த மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்துள்ளனர். மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர், கல்யாண் பகுதிக்கு வரவுள்ளார். அதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்க முடிவு செய்திருக்கின்றனர் அதிகாரிகள். மைதானத்தில் ஹெலிபேட் அமைக்க தானவாடே மற்றும் அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் இந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டால், எங்களது கிரிக்கெட் பயிற்சி பாதிக்கப்படும், அதனால் ஹெலிபேட் அமைக்கும் இடத்தை மாற்றுமாறு பிரனவ் தானவாடே மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர்களோ மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரனவ் தானவாடே உள்ளிட்ட வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்தை விட்டு வெளியேறவும் மறுத்திருக்கின்றனர்.
போராட்டத்தையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். போலீசார் மைதானத்தை விட்டு வீரர்களை வெளியேறுமாறு கூறியுள்ளனர். பிரனவ் தானவாடே உள்ளிட்ட வீரர்கள் மறுத்து விட்டனர். கோபமடைந்த போலீசார், பிரனவ் தானவாடேவின் காலரை பிடித்து தர தரவென இழுந்து சென்றுள்ளனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று லாக்அப்பில் அடைத்துள்ளனர். 'போலீசார், பிரனவை அடிக்க மட்டும்தான் செய்யவில்லை. மற்றபடி எல்லாவிதத்திலும் அவரை டார்ச்சர் செய்தனர்' என அவரது நண்பர்கள் கூறுகின்றனர். சம்பவத்தை கேள்விபட்டு, பிரனவுக்கு ஆதரவாக வந்த அவரது தந்தை பிரசாந்தையும் லாக்அப்பில் அடைத்து போலீசார் அராஜகம் செய்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் போலீஸ் நிலையத்துக்கு சென்று விடுவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்பிறகே போலீசார் பிரனவை விடுவித்துள்ளனர்.

பிரனவின் கைதுக்கு அவரது பயிற்சியாளர் மொபின் ஷேக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த பகுதியில் கிரிக்கெட் பயிற்சிக்கு எடுக்க சிறந்த மைதானங்கள் கிடையாது. இந்த ஒரு மைதானம்தான் கிரிக்கெட்டர்களுக்கு கோயில் போன்றது. அதையும் கெடுத்தால் எப்படி?. ஒரு வருடத்திற்கு முன் அந்த இளம் வீரரை கொண்டாடினீர்கள். இப்போது அவமானப்படுத்துகிறீர்கள். ஒரு மாணவனை, சிறந்த கிரிக்கெட் வீரரை கிரிமினல் போல நடத்தினால் எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரனவ் தானவாடே 327 பந்துகளில் 1009 ரன்கள் குவித்தார். அவரது சாதனையை பாராட்டி மும்பை கிரிக்கெட் சங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஸ்காலர்ஷிப்பாக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது அவரது லட்சியம்.
கிரிக்கெட்டில் வரலாறு படைத்தால் என்ன... நமது அரசியல்வாதிகளும் போலீசும் நினைத்தால் நமது வரலாற்றையே மாற்றி எழுதி விடுவார்கள!.