முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக பொது செயலாளர் பதவி காலியாகவே உள்ளது. இதனால், அந்த பதவிக்கு, அவரது தோழி சசிகலாவை பொறுப்பேற்குமாறு அமைத்து அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தொண்டர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன போஸ்டர்கள், பேனர்களை வைத்துள்ளனர். இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அதிமுகவை வழி நடத்துமாறு சிலர் கூறி வருகின்றனர். இதையொட்டி தீபாவை ஆதரித்து பல பகுதிகளில் கட்அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு யார் தலைமையேற்று வழி நடத்துவது என்பது கேள்விக் குறியாகவும், குழப்பமாகவும் உள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிமுகவினர், மாற்று கட்சிகளில் சேரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கோவில்பட்டியில், அதிமுக மகளிர் அணியை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர், அதிமுகவில் இருந்து விலகி பி.ஜே.பி.யில் இணைந்துள்ளனர். இதனால், அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் பலரும், பல்வறு கட்சியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
source: http://kaalaimalar.net/admk-women-joins/