ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாத அறிவிப்பில், பிரதமர் மோடி பேச மட்டும் தான் செய்கிறார், ஆனால், தடம்மாறிப்போன இந்த திட்டத்தை சீரமைக்க எந்த தீர்வும் இல்லை என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதைத் தொடர்ந்து வங்கிகள், ஏ.டி.எம்.களிலும்பணம் எடுக்க மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக மத்திய அரசை எதிர்த்து வருகிறார். இது குறித்து டுவிட்டரில் பிரதமர் மோடியை விமர்சித்து வெளியிட்ட கருத்தில், “ செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு பேச்சை தவிர்த்து ஒன்றும் தெரியவில்லை. பிரதமர் மோடிக்கு ரூபாய்நோட்டு விவகாரம் தடம் மாறிச்சென்றது தெரியும். இருந்து அவர் தீர்வுக்கு முயற்சிக்க வில்லை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “ ரூபாய் நோட்டு விவகாரத்தால், பொருளாதார பேரழிவு ஏற்பட்டதற்கு பொறுப்பு ஏற்று பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா ெசய்ய வேண்டும். அவர் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்க தார்மீக உரிமை இல்லை. பிரதமர் யாரையும் நம்பமறுக்கிறார், நாட்டு எது நல்லது என்பதை புரிந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்து இருந்தார்.
source: kaalaimalar