வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலேசிய தீபகற்ப கடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வலுவடையும் பட்சத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் என்றும், இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறினால் அதற்கு பாகிஸ்தான் நாடு பரிந்துரைத்த வர்தா எனும் பெயர் சூட்டப்பட உள்ளது.

வங்கக் கடலில் உருவான நடா புயல், நாகை அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவான அளவே பெய்துள்ளதால் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.
பதிவு செய்த நாள் : December 03, 2016 - 12:15 PM