சனி, 3 டிசம்பர், 2016

எதிர்பார்த்த கருப்பு பணம் டெபாசிட் ஆகவில்லை மத்திய அரசு கடும் அதிர்ச்சி

புதுடெல்லி

கருப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடி முதல் 5 லட்சம் கோடி வரையிலான கருப்புப் பணம் இன்னும் வங்கியில் வந்து சேரவில்லை.

பொதுமக்களின் கையில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் அவரவர் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்ததே தவிர, மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாததால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.

அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவில் மொத்தமாக ரூ.15.44 லட்சம் கோடி (ரூ.8.58 லட்சம் கோடி அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகளும், ரூ.6.86 லட்சம் கோடி 1000 ரூபாய் நோட்டுகளும்) புழக்கத்தில் இருந்தன.

அதே சமயம், இந்த அறிவிப்பு வெளியாகி சரியாக 20 நாட்களில், அதாவது நவம்பர் 28ம் தேதி வரை பொது மக்களிடம் இருந்து வங்கிகளுக்கு வெறும் 8.45 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்னமும் 30 நாட்கள் இருக்கிறது என்றாலும், அதில் சுமாராக ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே வங்கிகளுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்பார்த்த மிகப்பெரிய கருப்புப் பணம் எங்கே போனது? கருப்புப் பணம் வைத்திருப்போர் அதனை மாற்றாமலேயே விடப்போகிறார்களா? இல்லை முன்னமயே அது வங்கிகளில் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுவிட்டதா? என பல்வேறு கேள்விகளை மத்திய அரசு தங்களைத் பார்த்து தாங்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.