திங்கள், 16 ஜனவரி, 2017

இனி ஏ.டி.எம்.களில் நினைத்த நேரத்தில் பணம் எடுக்க முடியாது

மாதத்துக்கு ஏ.டி.எம்.களில் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கும் அளவை குறைப்பது குறித்து மத்தியஅரசு ஆலோசித்து வருகிறது.
வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் ஒருவர், அதே வங்கி ஏ.டி.எம்.களில் மாதம் ஒன்றுக்கு  5 முறை கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம். அதேபோல, மற்ற வங்கி ஏ.டி.எம்.களை 3 முறை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
ஒட்டுமொத்தமாக கட்டணம் இன்றி 8 முறை ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் அளவை  3 முறையாக குறைப்பது குறித்து நிதிஅமைச்சகம் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கூட்டத்தில், வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து மிகப்பெரிய தனியார் வங்கியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ மாதத்துக்கு ஏ.டி.எம்.களில் கட்டணம் இன்றி ஒருவர் 8 முறை வரை பணம் எடுக்கலாம் என்ற சலுகை இப்போது இருக்கிறது. இதை மூன்றாகக் குறைத்து வரும் நிதிஅமைச்சகத்துடனான பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாதத்துக்கு 3 முறை மட்டுமே கட்டணம் இன்றி ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்படும் போது, மக்கள் இயல்பாக டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறுவார்கள்” எனத் தெரிவித்தார்.
தற்போது பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் ஏ.டி.எம்களில் இருந்து மாதம் ஒன்றுக்கு 5 முறை கட்டணம் இன்றி பணம் எடுக்கவும், அதற்கு மேல் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ. 20 சேவைக்கட்டணமாக வசூலிக்கின்றன.
அதேசமயம், மும்பை, சென்னை, உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில்  இருக்கும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாதவர்களுக்கு மாதத்துக்கு 3 முறை மட்டுமே கட்டணம் இன்றி பணம் எடுக்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.