வெள்ளி, 22 நவம்பர், 2019

நித்யானந்தா விவகாரம்...!

பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது மகள்கள் லோக முத்ரா, நந்திதா சர்மா ஆகியோர் குஜராத் மாநிலம் ஹிராபூர் ஆசிரமத்தில் இருப்பதாகவும், தனது மகள்களை சந்திக்க நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்க மறுப்பதாகவும் கூறி குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு சிறுமிகளை நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. 
நன்கொடை வசூலிக்குமாறு சிறுமிகள் துன்புறுத்தப்பட்டதும் அம்பலமானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அகமதாபாத் போலீஸார், ஹிராபூர் ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரியா நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோரை கைது செய்தனர். மீட்கப்பட்ட நான்கு சிறுமிகளில், பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் மகள்களான லோக முத்ரா, நந்திதா சர்மா ஆகியோர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
நித்யானந்தாவை கைது செய்ய திட்டம்:
நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நிலையில், இந்தியா திரும்பினால் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே நித்யானந்தாவின் ஹிராபூர் ஆசிரம நிலமானது டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சட்டவிதிகளை மீறி ஆசிரமம் நடத்த குத்தகைக்கு நிலம் கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதேஷ்புரியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

credit ns7.tv