தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை உள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.
மக்களவையின் கேள்வி நேரத்தின் போது, பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில், 93 சதவீத பால் மாதிரிகள் மனிதர்கள் உட்கொள்ள ஏதுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக கூறினார். அதேநேரம் 41 சதவீத பாலின் தரத்தின் அளவு குறைந்து காணப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
மொத்தம் 6 ஆயிரத்து 432 மாதிரிகளில் 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 368 பால் மாதிரிகளில் அப்லடாக்சின் எம்-1 (Aflatoxin M1) என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் அஸ்வினி குமார் செளபே, அப்லடாக்சின் எம்-1 வேதிப்பொருள் அதிகமாக உள்ள பால், தமிழகத்தில் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறினார்.
credit ns7.tv